Published : 31 Dec 2021 11:03 AM
Last Updated : 31 Dec 2021 11:03 AM

ஆஸ்திரேலிய பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைப்பு: பூர்வக்குடிகள் போராட்டத்தில் பதற்றம்

கான்பரா: ஆஸ்திரேலியாவில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தற்போது அருங்காட்சியமாக இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ வைக்கப்பட்டபோது 20க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். நிலைமையை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர் பிழைத்தனர்.

வலுக்கும் போராட்டம்: ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இந்தக் கட்டிடத்திற்கு பூர்வகுடிகளின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தத் திரண்டனர். தங்களின் இறையாண்மைக் காக்க வேண்டும் என்பது தான் பூர்வக்குடிகளின் நீண்ட நாள் போராட்ட கோரிக்கையாக இருக்கிறது. கடந்த 15 நாட்களாகவே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்தப் போராட்டத்தில் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் ஸ்காட் மாரிஸன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதில்லை. ஆஸ்திரேலியா இப்படிச் செயல்படுவதில்லை என்றார். நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளச் சின்னம் மீது இப்படியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது என்றும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னர் டென்ட் தூதரகம் அனைத்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனை நினைவுகூரும் வகையிலேயே போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகியும் தங்களின் இறையான்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதே அவர்களின் ஆதங்கமாக உள்ளது. இருப்பினும் பழைய நாடாளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்டதற்கு டென்ட் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறோம். அதற்கான போராட்டங்கள் நேர்மையாக, நியாயமாக நடைபெற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல என அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பூர்வக்குடிகள் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்களால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x