Published : 28 Dec 2021 10:57 AM
Last Updated : 28 Dec 2021 10:57 AM
கடந்த மூன்று நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சுற்றுலா சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச விமானப் போக்குவரத்துகளை ஆய்வு செய்யும் ஃப்ளைட் அவேர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இதுவரை 11,500 விமானங்கள் ரத்தாகியுள்ளன. திங்களன்று 3,000 விமானங்களும், செவ்வாயன்று 1,100 விமானங்களும் ரத்தாகியுள்ளன. ஒமைக்ரான் பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அன்றாடம் லட்சக் கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்படுவதால், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் அறிகுறிகளற்ற கரோனா பாதிப்பு ஏற்படுவோர் 5 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் பணிக்குத் திரும்பலாம் என அமெரிக்க தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக அறிகுறிகளற்ற கரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்துதல் 10 நாட்கள் என இருந்தது. அமெரிக்காவில் அன்றாடம் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அதிபர் ஜோ பைடன், இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழல் ஏற்படலாம். ஆனால் இது குறித்து அமெரிக்கர்கள் பீதி அடைய வேண்டாம் என்றார். மேலும், டெல்டாவைப் போல் ஒமைக்ரான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார். ஒமைக்ரான் கவலை தரும் வைரஸாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக பீதியடைய வேண்டாம் என்று பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 8 லட்சத்து 16 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை: ஒமைக்ரான் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் சூழலில், ஐரோப்பிய நாடுகள் பலவும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் அக்கறை காட்டி வருகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவதால் தடுப்பூசி எதிர்ப்பாளர்களை சரிகட்டும் முயற்சியிலும் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கங்கள் விதித்துள்ளன. இங்கிலாந்தில் இன்னும் தொற்று பரவல் வேகம் குறையவில்லை. கிரீஸ் நாட்டில் நள்ளிரவுக்குப் பின் பார்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT