Published : 27 Dec 2021 08:33 PM
Last Updated : 27 Dec 2021 08:33 PM

நீண்ட தூரப் பயணத்துக்கு ஆண் வழித்துணையாக வந்தால் மட்டுமே அனுமதி: ஆப்கன் பெண்களுக்கு தலிபான்கள் கெடுபிடி

காபூல்: நீண்ட தூரப் பயணத்துக்கு ஆண்கள் வழித்துணையாக வந்தால் மட்டுமே பெண்கள் தனியாகச் செல்ல முடியும் என்று தலிபான் அரசு கெடுபிடி விதித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கின. ஆகஸ்ட் மத்தியில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தலிபான் ஆட்சி அமைத்தபின்னர் அங்கு பெண்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் நிலவி வருகின்றன.

பெண்கள் பயிலும் உயர்நிலை வகுப்புகள் பலவும் மூடப்பட்டுள்ளன. நிறுவனங்களில் பெண்கள் வேலை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணத்துக்குக் கூட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தலிபான் அரசு. இது பெண்களை மென்மேலும் அடிமைப்படுத்தும் செயல் எனக் கூறுகிறது கேம்பெய்ன் குரூப் என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு. இந்த அமைப்பின் இணை இயக்குநர் ஹீதர் பார் கூறுகையில், "தலிபான்களின் இந்த உத்தரவு பெண்களுக்கு அடிமை விலங்கு போடுகிறது. பெண்கள் இயல்பாக எளிதாக நடமாடமுடியாமல் போவதோடு ஒருவேளை வீட்டில் வன்முறையை எதிர்கொண்டாலும் கூட அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் போகும்" என்றார்.

பாத்திமா என்ற ஆப்கன் பெண் சர்வதேச ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், இப்படியொரு உத்தரவை தலிபான்கள் பிறப்பித்துள்ளனர். இதனால், வீட்டில் ஆண்கள் இல்லாதபோது எனக்கோ என் குழந்தைகளுக்கோ உடல்நிலை பாதிக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தலிபான்கள் தங்களின் மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் பறித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
அதேபோல், பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் ஹிஜாப் அணியாமல் பெண்கள் ஏற முயன்றால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் தலிபான்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். வாகனங்களில் பாடல்களை இசைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தலிபான்கள் பெண் கல்விக்கும், பெண்களின் பணி சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். ஆனால், இவையெல்லாம் தற்காலிகமானவையே, பணியிடங்களும், கல்வி நிறுவனங்களும் பெண்கள், பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக ஆனவுடன் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என தலிபான்கள் கூறுகின்றனர்.
1990களில் ஆப்கன் மீது அதிகாரம் செலுத்தியபோதும் தலிபான்கள் இதேபோன்றுதான் நடந்து கொண்டனர். கடந்த மாதம், பெண்கள் இனி சீரியல்களில் நடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டதும், பெண் பத்திரிகையாளர்கள் திரையில் தோன்றும்போது தலையைச் சுற்றி ஹிஜாப் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆப்கனுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளைச் செய்து வரும் நாடுகள், தலிபான்கள் பெண்களை மதிக்க வேண்டும், அவர்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x