Published : 27 Dec 2021 10:57 AM
Last Updated : 27 Dec 2021 10:57 AM
நியூயார்க்: அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவலால் குழந்தைகள் நல வார்டு நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இன்று 110க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
அமெரிக்காவில் சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து நியூயார்க் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நியூயார்க் நகரில் மட்டுமே 4 மடங்கு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதியாகும் குழந்தைகளில் 5 வயதுக்கும் உட்பட்டோரில் பாதிக்கும் அதிகமானோர்" என்று கூறியுள்ளது.
ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி கடந்த 7 நாட்களில் அன்றாடம் 1,90,000 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று உறுதியாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அங்கு கரோனா பரிசோதனையில் சுணக்கம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பெருந்தொற்று ஆலோசகர் ஆண்டனி ஃபாக்கி, "கரோனா பரிசோதனையில் சுணக்கம் இருப்பது உண்மைதான். அடுத்த மாத துவக்கத்திலிருந்து இது சரியாகும்." என்று கூறியுள்ளார்.
கரோனா பரிசோதனையில் சுணக்கம் ஒருபுறம் இருக்க, ஒமைக்ரான் பரவலால் அமெரிக்கர்கள் பலரும் தங்கள் புத்தாண்டு விடுமுறைப் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு குறித்து தென் ஆப்பிரிக்கா, பிரிட்டனில் இருந்து வரும் தகவல்கள், இந்த வைரஸால் மருத்துவமனையில் அனுமதியாகும் அபாயம் குறைவு என்றும், ஆக்ஸிஜன் தேவை குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஃபாக்கி ஒமைக்ரான் மிக அதிகமாக பரவுவதால் நாளடைவில் ஒமைக்ரானால் ஏற்படும் நோய் பாதிப்பு குறைவு என்ற நிலைமை மாறலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT