Published : 24 Dec 2021 09:29 PM
Last Updated : 24 Dec 2021 09:29 PM

வங்கதேச படகு விபத்தில் 40 பேர் உடல் கருகி பலி: 150 பேர் காயம்

வங்கதேசத்தின் தென் பகுதியில் படகு விபத்தில் 40 பேர் உடல் கருகி பலியாகினர். 150 பேர் படுகாயமடைந்தனர். மூன்றடுக்க கொண்ட கப்பல் ஒன்று சுமார் 800 பயணிகளுடன் சுகந்தா நதியில் பயணித்துக் கொண்டிருந்தது.

எம்வி அபிஜான் என்ற அந்தக் கப்பல் தலைநகர் டாக்காவில் இருந்து பர்குனா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில், கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பிடித்தது. கப்பல் முழுவதும் தீ மளமளவென வேகமாகப் பரவ பயணிகள் பலர் கப்பலில் இருந்து தண்ணீரில் குதித்தனர். சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் கப்பலுக்குள்ளேயே சிக்கி தீயில் கருகி இறந்தனர்.

இந்தப் படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதாலேயே விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. விடுமுறையைக் கழிப்பதற்காக குடும்பம், குடும்பமாக இந்தப் படகில் பலரும் பயணித்துள்ளனர்.

விசாரணைக் குழு அமைப்பு: இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு படகு விபத்துக்கான காரணத்தை அறிந்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த விபத்தில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

3 மணி நேரம் எரிந்த தீ: தீ விபத்து குறித்து பரிஷால் பிரிவு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் கமல் உத்தீ புய்யான் கூறுகையில், "விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்களுடன் சென்றோம். சரியாக 3.50 மணிக்கு பணி ஆரம்பித்தது. 5.20 மணிக்கு தான் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் 3 மணிக்கே தீ இன்ஜின் அறையில் பிடித்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x