Published : 23 Dec 2021 09:38 PM
Last Updated : 23 Dec 2021 09:38 PM
ஒமைக்ரான் வேகமாகப் பரவுவதால் மக்களுக்கு 4வது டோஸ் தடுப்பூசி போடப்படும் என இஸ்ரேல் நாட்டுப் பிரதமர் நஃப்டாலி பென்னட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன். கடந்த ஏப்ரல் மாதம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கரோனாவை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்த வேளையில் இஸ்ரேல் தனது மக்களுக்குப் பொது இடங்களைத் திறந்துவிட்டது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்தது. உலகிலேயே இஸ்ரேல் மக்கள் தான் முதன்முதலாக பூஸ்டர் தடுப்பூசி பெற்றனர். இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் 4வது தடுப்பூசி பற்றி அறிவித்துள்ளார். அதிகாரிகள் நாடு தழுவிய 4வது பூஸ்டர் தடுப்பூசி திட்டத்துக்கு தயாராகும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால் 4வது டோஸ் தடுப்பூசி செலுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது என்று இஸ்ரேலின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தலைவர் கலியா ரஹாவ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு 4வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. "நாங்கள் தான் முதலில் 3வது டோஸ் செலுத்தினோம். இப்போது 4வது டோஸையும் நாங்களே முதன்முதலாக செலுத்தவுள்ளோம்" என்று பிரதமர் நஃப்டாலி பென்னட் தெரிவித்தார்.
இஸ்ரேல் கரோனா பெருந்தொற்றைக் கையாளும் விதத்தை உலக நாடுகள் பல ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேலில் முதன்முதலில் கரோனா தடுப்பூசி பெரும்பான்மையை மக்களுக்குப் போடப்பட்டவுடனேயே முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் புள்ளிவிவரங்களைக் கொண்டே ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி ஆற்றலைப் பற்றி ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இஸ்ரேல் தடுப்பூசி திட்டத்தை திறம்பட செயல்படுத்தியிருக்கிறது. அதேபோல், மூன்றாவது பூஸ்டர் டோஸ் என்ற திட்டத்தையும் இஸ்ரேல் தான் முதன்முதலாக செயல்படுத்தியது.
இந்நிலையில் தான் தற்போது 4வது டோஸ் தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி திட்டத்துக்காக இஸ்ரேலை உலக சுகாதார அமைப்பு கடிந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் மூன்று நாள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT