Published : 22 Dec 2021 07:15 PM
Last Updated : 22 Dec 2021 07:15 PM
ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது என்று அந்நாட்டு தொற்று நோய் ஆராய்ச்சி மையம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒமைக்ரானால் அடுத்த அலைகளை சில நாடுகள் சந்தித்து வருகின்றன. இன்னும் சில நாடுகள் அடுத்த அலைகளை எதிர்நோக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டின் தொற்று நோய்கள் தேசிய ஆராய்ச்சி மையம் ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற உருமாறிய கரோனா வைரஸ்களை ஒப்பிடும் போது ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் ஆபத்து 80% குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த 4வது அலையில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும், அச்சுறுத்தலும் இருக்கும்.
முதன்முதலாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட டெல்டா பாதிப்புகளை ஒப்பிடும்போது இப்போதுள்ள ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்படும் நோய்த் தீவிரம் 70% குறைவாக இருக்கிறது.
ஒமைக்ரான் கண்டறியப்பட்டதில் இருந்து பரவல் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்றாளர்கள் அதிகளவில் வைரஸ் சுமையை சுமக்கின்றனர். அதனாலேயே பரவும் தன்மையும் அதிகமாக உள்ளது"
இவ்வாறாக அந்த ஆய்வறிக்கையை எழுதிய ஆராய்ச்சியாளர்கள் நிகோல் வால்டர் மற்றும் செரில் ஹோஹென் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை மொத்த மக்கள் தொகையில் 44% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் இந்த புதிய ஆய்வறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என பிரிட்டனின் ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரிய பால் ஹன்ட்டர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் ஆபத்து டெல்டாவை ஒப்பிடும்போது 80% குறைவு என்பதை உருமாறிய வைரஸின் தன்மை என்று இப்போதே உறுதியிட்டு கூற முடியாது. ஒருவேளை அது வைரஸின் தன்மையா அல்லது கடந்த டெல்டா அலையின் போது இருந்ததைவிட இப்போது அதிக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்டுள்ள பயனா என்பதை இன்னும் உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கும் பல தகவல்களை ஆராய்ந்து அலசிப் பார்த்தே சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT