Published : 22 Dec 2021 12:20 PM
Last Updated : 22 Dec 2021 12:20 PM
அமெரிக்காவில் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் களைகட்டி வருகின்றன. கிறிஸ்துமஸ் என்றால், அமெரிக்காவில் விடுமுறைப் பயணங்கள்தான் பிரபலம். ஆனால், எல்லோருக்கும் இத்தகைய பயணங்கள் சாத்தியமாவதில்லை.குறிப்பாக, மேற்கு டல்லாஸில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்துமஸ் டூர் என்பது கனவே. ஆனால், அங்குள்ளவர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும்தானே. அவர்களின் மகிழ்ச்சிக்காகவே, பில்டர்ஸ் ஆஃப் ஹோப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சில ஏற்பாடுகள் செய்து அப்பகுதி வாழ் மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உயிர் கொடுத்து வருகின்றனர்.
சான்ட்டா க்ளாஸ் வேடமணிந்த தன்னார்வலர்கள் பரிசுப் பொருட்களுடன் டல்லாஸில் மேற்கொள்ளும் கொண்ட்டாட்டங்கள் ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதுவும் கறுப்பின இளைஞர்கள் சான்ட்டாவாக வேடமிட்டு செய்யும் நற்காரியங்கள் கவனம் பெற்றுள்ளன.
கார்மெலோ ஜாக்சனுக்கு ஐந்து வயது. தங்கள் பகுதிக்கு வந்துள்ள சான்ட்டாவைப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் கார்மெலோ. அவருக்கு, சான்ட்டாவிடம் இருந்து ஒரு பவர் ரேஞ்சர் பொம்மையைப் பெற வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் கனவு.
சான்ட்டாவைப் பற்றி கார்மெலோ, அவருக்கு நீண்ட முடி இருக்கிறது. பூட்ஸ் அணிந்திருக்கிறார். பெல்ட் போட்டிருக்கிறார். அவர் சூட் அணிந்துள்ளார். மீசையும் இருக்கிறது. எல்லோருக்கும் பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று வரிசையில் மகிழ்ச்சியான காத்திருப்பின்போது கூறினார்.
பில்டர்ஸ் ஆஃப் ஹோப் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர் ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் கூறும்போது, "டல்லாஸ் நகரில் வீடற்றவர்களுக்கு எளிய வீடுகளைக் கட்டித் தரும் பணியில் 15 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம். இங்கே 30% மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இங்கே பலருக்கும் கிறிஸ்துமஸ் எளிதாக கைக்கு எட்டுவதில்லை. இங்குள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் அனுபவத்தைக் கொடுக்க விரும்புகிறோம். இந்த ஆண்டு முதன்முறையாக நாங்கள் கறுப்பின இளைஞரை சான்ட்டா க்ளாஸாக நியமித்துள்ளோம்.
இங்குள்ள குழந்தைகளுக்கு வெள்ளை சான்ட்டா க்ளாஸுடன் இணக்கமாக இருக்க முடியவில்லை. அதனால் இந்தாண்டு அவர்களை மகிழ்விக்கவே கறுப்பின இளைஞரை சான்ட்டா க்ளாஸாக நியமித்துள்ளோம். இன்று குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இன்று இங்கு வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணவு அடங்கிய பெட்டகம் ஒன்று தருகிறோம். குழந்தைகளுக்காக கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம். மேலும் அவர்களுக்கு பரிசுகளையும் கொடுக்கிறோம்.
அமெரிக்காவில் கடந்த 2016-ல்தான் முதன்முதலாக ஒரு வணிக வளாகத்தில் பிளாக் சான்ட்டா க்ளாஸ் பணியமர்த்தப்பட்டார். இப்போது கலாசார பிரதிநிதித்துவத்துக்கான் குரல் ஓங்கிவரும் நிலையில் அங்கு வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த சான்ட்டாக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்க்க முடிகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT