Published : 22 Dec 2021 12:00 PM
Last Updated : 22 Dec 2021 12:00 PM
கச்சின்: மியான்மரின் வடபகுதியில் உள்ள கச்சின் மாகாணத்தில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 100 பேரைக் காணவில்லை. இதுவரை ஒருவர் உயிரிழந்ததுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கச்சின் மகாணத்தில் உள்ள பகாந்த் பகுதியில் பச்சைக் கற்கள் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்துள்ளது. இந்தச் சுரங்கத்தில் இன்று வழக்கம் போல் நூற்றுக்கும் மேலான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்திய நேரப்படி காலை 4 மணி அளவில் திடீரென மண் சரிந்து சுரங்கத்தில் விழுந்து மூடியது.
இந்த விபத்தில் சுரங்கத்தில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர், பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
மீட்புப் படையைச் சேர்ந்த கோ நியா கூறுகையில், “இதுவரை படுகாயங்களுடன் 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. சுரங்கத்துக்குள் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம். 200 பேர் வரை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். சுரங்கத்துக்கு அருகே இருக்கும் ஏரியில் படகு மூலம் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, கச்சின் செய்தி நிறுவனம் கூறுகையில், “இதுவரை நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துவிட்டனர். ஹகந்த் மற்றும் லோன் கின் நகரிலிருந்து தீ தடுப்புப் பிரிவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
கச்சின் நெட்வொர்க் டெவலப்மென்ட், “சுரங்கத்தில் இருந்தவர்களில் 80 பேர் வரை அருகில் உள்ள ஏரியில் மூழ்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
மியான்மரில் உள்ள பச்சைக் கற்கள் சுரங்கங்கள் உண்மையில் மிக ஆபத்தானது. கடந்த 2020-ம் ஆண்டு ஹகந்தில் நடந்த மண்சரிவு விபத்தில் 160 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். 2019-ம் ஆண்டில் 54 பேர் உயிரிழந்தனர்.
குறைந்த ஊதியத்துக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தச் சுரங்கத்தில் பணியாற்றி வந்தனர். இந்தச் சுரங்கத்தில் இயந்திரங்கள் திடீரென கோளாறு ஏற்படுவது, விபத்துகள் நடப்பது இயல்பானது. இந்தச் சுரங்கங்களைத் தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்து நடத்துகிறது.
கச்சின் மாகாணத்தில் உள்ள ஹகந்த் பகுதியில் உலகிலேயே அதிகமான, விலை மதிப்புள்ள பச்சைக் கற்கள் கிடைக்கும் பகுதியாகும். இங்கு எடுக்கப்படும் பச்சைக் கற்கள் பெரும்பாலும் வரி ஏய்ப்பு செய்து சீனாவுக்குக் கடத்தப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT