Published : 22 Dec 2021 10:38 AM
Last Updated : 22 Dec 2021 10:38 AM
ஜெனிவா: 2021ம் ஆண்டில் மட்டும் கரோனா வைரஸால் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர், 2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்தார்
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26ம் தேதி கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிட்டது. ஒமைக்ரானுக்கு அஞ்சி, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளன. ஆனால், பிரி்ட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஊடகங்களுக்கு ஜெனிவாவில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2021ம்ஆண்டில் உலகளவில் ஹெச்ஐவி, மலேரியா, காசநோய் ஆகியவற்றில் மூன்றும் சேர்த்து உயிரிழந்தவர்களைவிட, கரோனாவில் உயிரிழந்தவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கரோனாவில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், ஒவ்வொரு வாரமும் 50 ஆயிரம் பேர் பலியானார்கள். 2022ம் ஆண்டு கரோனாவுக்கு முடிவு கட்டும் ஆண்டாக இருக்க வேண்டும்.
2022ம் ஆண்டில் எந்தவிதமான பேரழிவும் நிகழாமல் தடுக்கும் வகையில் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முதலீடு செய்ய வேண்டும், அதற்கான முயறச்சியில் ஈடுபட்டுநிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய வேண்டும். நோய் தடுப்புமுறைகளில் முதலீடு செய்தல், ஆரம்ப சுகாதார வசதிகளை அதிகப்படுத்துதல், மருத்துவக் காப்பீடு ஆகியவற்றில் நாடுகள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.
கரோனாவில் மட்டும் உயிரிழப்பு நிகழவில்லை, போதுமான அளவு மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, உயிர்காக்கும் வசதிகள் கிடைக்காமலும் உயிரிழப்பு அதிகரித்தது.
தற்போது ஆப்பிரிக்கா நாடுகள் நீண்ட கரோனா அலையை எதிர்நோக்கியுள்ளன, இந்த அலை ஒமைக்ரானால்தான் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்குமுன்பு வரை ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால், கடந்த வாரம் நிலவரப்படி, உலகிலேயே அதிகபட்சமாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் இருக்கும் நாடுகளாக மாறிவிட்டது.
டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவும்தன்மை கொண்டது என்பதற்கு நிலையான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. கரோனாவில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோர், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்கூட ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம்.
விடுமுறை காலத்தில் உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும்.மக்கள் அதிகமாகக் ஒரு இடத்தில் கூடும்போது, அங்கு கரோனா தொற்று அதிகரிக்கும், சுகாதார துறைக்கு பெரும் அழுத்தம் ஏற்படும், உயிரிழப்பும் ஏற்படும்.
அனைவருமே இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆதலால்,குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறோம். இயல்பு வாழ்க்கைக்கு வாழவும் விரும்புகிறேந். இதை அனைத்தையும் விரைவாக நாம் செய்வதற்கு உலகத்தலைவர்கள், தனிநபர்கள் அனைவரும் கடினமான முடிவுகளான தற்காப்பு முறைகளைக் கடைபிடித்து, மற்றவர்களையும் காக்க வேண்டும்.
பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டமாக மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் ரத்து செய்வதன் மூலம், அங்கு செல்வதைத் தவிர்ப்பதன் மூலம் பலரின் வாழ்க்கை காலியாவதிலிருந்து காக்க முடியும்.
ஒவ்வொரு நாடுகளும் தங்கள் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டதை உறுதி செய்ய வேண்டும். 2022ம் ஆண்டில் கரோனாவில் முடிவுக்குக் கொண்டுவர விரைவி்ல் இந்த சதவீதத்தை ஒவ்வொரு நாடும் எட்ட வேண்டும்.
இவ்வாறு டெட்ராஸ் அதானம் தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT