Last Updated : 22 Dec, 2021 11:09 AM

2  

Published : 22 Dec 2021 11:09 AM
Last Updated : 22 Dec 2021 11:09 AM

ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக நாடுகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி?

ஒருபக்கம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகிவரும் சூழலில், ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய பிராந்தியந்தில் உள்ள 53 நாடுகளில் 38 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் இது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட காலம். கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பங்கள் கொண்டாட விரும்பும் நேரமிது. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் பயணங்களைத் திட்டமிட்டு கொண்டாடும் பழக்கம் உண்டு. கரோனா டெல்டா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஐரோப்பிய நாடுகளில் திட்டமிடப்பட்டு வந்த நிலையில், நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் முதல் தொற்று பதிவானது. இப்போது தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் மிக அதிகமாக்க ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில், அங்கு பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தடைபட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ் விடுமுறை பயணத்தை ரத்து செய்த ராணி எலிசபெத்: ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறைப் பயணத்தை லட்சக்கணக்கானோர் ரத்து செய்துள்ளது போல் பிரிட்டன் ராணியும் ரத்து செய்துள்ளார். 95 வயதான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸ் விடுமுறையில் சாண்ட்ரிங்ஹாமுக்குச் செல்வது வழக்கம். 70 ஆண்டுகளாக அவர் இந்தப் பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறார். ஆனால், இந்த முறை பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருப்பதால் ராணி எலிசபெத் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இதனை பிரிட்டன் அரண்மனை வட்டாரம் உறுதி செய்துள்ளது.

நெதர்லாந்தில் முழு ஊரடங்கு: கடந்த இரண்டு வாரங்களாக ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துவரும் நெதர்லாந்து நாட்டில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த நெதர்லாந்து நாட்டுப் பிரதமர் மார்க் ரூட், "ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுகிறது. இந்த வேகத்தில் பரவினால் நாட்டில் கரோனா நோயாளிகள் அதிகரிப்பர். மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்படும். பொது சுகாதாரத்தைக் கருத்தில்கொண்டு நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. டிசம்பர் 19 தொடங்கும் இந்த ஊரடங்கு ஜனவரி 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கிறிஸ்துமஸ் காலங்களில் வீடுகளில் இரண்டு விருந்தினரை அனுமதிக்கலாம்.

கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு, புத்தாண்டு முந்தைய இரவில் 4 விருந்தினர்கள் வரை வீடுகளில் பொதுமக்கள் வரவேற்றுக் கொண்டாடலாம். உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற கடைகளும் பிக்கப் சர்வீஸ்களை ஊக்குவிக்குமாறு வேண்டுகிறோம். பள்ளிகள் ஜனவரி 9-ஆம் தேதி வரை மூடியிருக்கும். கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஊரடங்கு என்பது மிக மோசமான முடிவாக இருக்கலாம். ஆனால், முன்னெச்சரிக்கை அவசியம். ஒமைக்ரான் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது" என்று கூறினார்.

பிரிட்டனின் நிலவரம் இதுதான்: பிரிட்டனில் அன்றாடம் கரோனா தொற்று எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால், இதுவரை ஊரடங்கு கெடுபிடிகள் பற்றி அந்நாடு ஏதும் அறிவிக்கவில்லை. கிறிஸ்துமஸ் வரை அப்படி ஏதும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்கமாட்டார் என்றே கூறப்படுகிறது. அண்மையில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், "ஒமைக்ரானால் மிகவும் கடினமான சூழல் உருவாகியுள்ளது. மக்கள் அனைவரும் லாக்டவுன் அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். இப்போதைக்கு என்னால் ஒரு விஷயம்தான் சொல்ல இயலும், கிறிஸ்துமஸுக்குப் பின்னர் நாட்டில் உள்ள நிலவரத்தைப் பொருத்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஒமைக்ரான் பாதிப்பு குறித்த தகவல்களை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். பொது சுகாதாரத்தை பேணுவதற்கான நடவடிக்கையை நிச்சயம் மேற்கொள்வோம்" என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமரின் கோரிக்கை: ஆஸ்திரேலியாவில் இன்னும் கரோனா கட்டுக்குள் வராத நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் மக்கள் வெளியே செல்லும்போது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போது கூட மாஸ்க் அணிவது அவசியம் என்று பிரதமர் ஸ்காட் மாரிஸன் தெரிவித்துள்ளார். தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட இப்போதைக்கு லாக்டவுன் இல்லை என்றே ஸ்காட் கூறியுள்ளார். ஆனால், குறைந்தபட்ச கட்டுப்பாடுகளையாவது விதிக்காவிட்டால் ஒமைக்ரானால் ஜனவரி, பிப்ரவரியில் அன்றாடம் 2 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகக் கூடும் என டோஹர்டி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஒட்டி மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் போதிய அளவில் பூஸ்டர் தடுப்பூசிகள் இல்லை. கரோனா பரிசோதனைக்கும், முடிவுகளைப் பெறவும் மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

பிரேக் தி ரூல்ஸ் அமெரிக்கா: அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம்பேருக்கு ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அமெரி்க்கா முழுவதையுமே ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் பேசிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், "இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே. அமெரிக்கா கரோனா பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தை பதற்றத்துடன் எதிர்கொண்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் டோஸை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார்.

ஆனால் அங்கு யதார்த்த நிலை வேறு மாதிரி இருக்கிறது. மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப் பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொண்டு வருகின்றனர். இல்லினாய்ஸ் பல்கலைக்கத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர் ரிஷப் சவுகான், "ஒமைக்ரான் பாதிப்பு பற்றி முதற்கட்டத் தகவல்கள் இது வேகமாகப் பரவக் கூடியது. ஆனால் தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கூறியுள்ளன. ஆகையால் மக்கள் இதன் அடிப்படையில் தங்களின் கிறிஸ்துமஸ் பயணங்களை திட்டமிட்டபடி ஒருங்கிணைத்து வருகின்றனர். வெகு சிலரே பயணங்களை ரத்து செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

ஜெர்மனியில் கெடுபிடி: ஒமைக்ரான் பரவலால் ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் ஸ்கால்ஸ் பல கெடுபிடிகளை விதித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக தனிநபர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதுவும், அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருக்க வேண்டும். உணவகங்களிலும் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே நுழைய முடியும். இது மற்ற ஷாப்பிங் மால்களுக்கும் பொருந்தும். கிறிஸ்துமஸுக்குப் பின்னர் ஒமைக்ரான் பாதிப்பைப் பொருத்து மேலும் கெடுபிடிகள் அமல் படுத்தப்படலாம் என்று ஸ்கால்ஸ் கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளில்தான் ஒமைக்ரான் பரவலின் அச்சுறுத்தலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வழக்கமான உற்சாகம் குறைந்துள்ளதே தவிர, கொரோனா அலைகளிலிருந்து வெகுவாக மீண்ட மற்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் உற்சாகத்துக்கு குறைவேதுமில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x