Published : 22 Dec 2021 09:06 AM
Last Updated : 22 Dec 2021 09:06 AM
ஐரோப்பிய பிராந்தியத்தில் அடுத்த அலை வந்து கொண்டிருக்கிறது. ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம் பூஸ்டர் தடுப்பூசி என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக் கூறியதாவது:
நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியந்தில் 53 நாடுகளில் 38 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது. டென்மார்க், போர்ச்சுகல், பிரிட்டன் போன்ற நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆதிக்க கிருமி என்ற நிலையை எட்டிவிட்டது.
இதனால் அடுத்த அலை வருவது கண்கூடாக தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் ஒமைக்ரான் உலகின் பல நாடுகளில் பரவிவிடும். ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள மருத்துவத் துறையை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். கடந்த சில வாரங்களில் ஐரோப்பிய பிராந்தியத்தில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. (உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பட்டியலில் ரஷ்யா, முன்னாள் சோவித் குடியரசுகள் மற்றும் துருக்கியும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது).
சில நாடுகளின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது பாதிப்பின் அளவு அதிர்ச்சியளிக்கக் கூடிய அளவுக்கு அதிகம். இந்தச் சூழலில் இணை நோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு, வயது மூப்பு என எளிதில் ஒமைக்ரானால் பாதிக்கக்கூடியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை முன்னுரிமை கொடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஒமைக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு போஸ்டர் ஊசி எடுத்துக் கொள்வது சிறந்த தற்காப்பு. ஒமைக்ரானால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழல் உருவாகாலாம். அரசாங்கங்கள் ஒமைக்ரானை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே மார்ச்சுக்குள் உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழக்கக் கூடும் என்று ஹூ கணித்திருந்த நிலையில் ஒமைக்ரானால் அது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை ஐரோப்பிய பிராந்தியத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளே இருக்கின்றன. 20 முதல் 30 வயது கொண்டோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நகரங்கள், சமூக, பணியிட கூட்டங்கள் கூடும் இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.
முன்னதாக நேற்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பில், டெல்டாவைவிட ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரை இது பாதிக்கின்றது என்று கூறியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT