Published : 21 Dec 2021 07:33 AM
Last Updated : 21 Dec 2021 07:33 AM
நியூயார்க்:அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம்பேருக்கு ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அமெரி்க்கா முழுவதையுமே ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் 6 மடங்குஅதிகரித்துள்ளதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
குறி்ப்பாக நியூயார்க் மாகாணத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தென்கிழக்கு, இன்டஸ்ட்ரியல் மிட்வெஸ்ட், பசிபிக் நார்த்வெஸ்ட் ஆகிய பகுதிகளிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் 6.50 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது .
கடந்த ஜூன் மாதம் கரோனா வைரஸில் டெல்டா வைரஸால்தான் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர், அதன்பின் இப்போது ஒமைக்ரானால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதிவரை கரோனா தொற்றில் 99.5சதவீதம் டெல்டாவாகத்தான் இருந்தது.
நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் மருத்துவர் ரோச்செல் வெலன்ஸ்கி கூறுகையில், “அமெரிக்காவில் இருப்பதைப் போலவே மற்ற நாடுகளிலும் ஒமைக்ரான் தொற்றால் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் தொற்று வேகமாகப் பரவும் என்பதில் வியப்பேதும் இல்லை. கடந்த நவம்பர் 26ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் அடுத்த ஒரு மாதத்துக்குள் 90 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவிவிட்டது.
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு இருக்குமா, பாதிப்பு குறைந்திருக்குமா என்பது யாருக்கும் தெரியாது.அதற்கான புள்ளிவிவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், 2 தடுப்பூசிக்கு மேல், பூஸ்டர் செலுத்துவது ஓரளவு பாதுகாப்பு அளிக்கும் என முதல்கட்ட ஆய்வில் தெரிவந்துள்ளது. கரோனாவில் பாதிப்பு தீவிரமடையாமல் இருக்க தடுப்பூசி மிக முக்கியம்” எனத் தெரிவித்தார்
ஸ்ரிக்ப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் எரிக் டோபால் கூறுகையில் “ அமெரிக்காவில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது குறுகிய காலத்தில் அதிவேகமான தொற்றாக இருக்கிறது. கரோனாவின் மற்ற உருமாற்றங்களைவிட ஒமைக்ரான பாதிப்பு எவ்வாறு இருக்கும் என இதுவரை யாருக்கும் தெரியாது. மிகப்பெரிய நிலையற்ற தன்மை நிலவுகிறது. தீவிரமான பாதிப்பு ஏற்படுபவர்களையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர்களையும் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாரமும் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் சேகரித்து, பல்வேறு ஆய்வகங்களுக்கும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வருகிறது. இதன் மூலம் எந்த வகை வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறது.
கடந்த டிசம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 0.4 சதவீதம் இருந்தநிலையில் இது அடுத்த 10 நாட்களில் 2.9 சதவீதமாக, ஏறக்குறைய 6 மடங்கு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT