Published : 21 Dec 2021 09:12 AM
Last Updated : 21 Dec 2021 09:12 AM

சவுதி அரேபியாவில் ட்விட்டர் பதிவுகளில் நாத்திகத்தை ஊக்குவித்தவருக்கு 15 ஆண்டு சிறை

துபாய்: ட்விட்டர் பதிவுகளில் நாத்திகத்தை ஊக்குவித்த யேமன் நாட்டவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக மனித உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

இது தொடர்பாக ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (எச்ஆர்டபிள்யு)’ என்று மனித உரிமை அமைப்பு நேற்று கூறியதாவது:

சவுதியில் உள்ள யேமன் நாட்டைச் சேர்ந்த அலி அபு லுகும் (38) என்பவர் 2 ட்விட்டர்கணக்குகள் மூலம் மத நம்பிக்கையை விமர்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சமூகஊடகங்களில் கடவுள் மறுப்பு கருத்துகளையும் பொது நெறிகள்,மத விழுமியங்களுக்கு எதிரான பதிவுகளையும் வெளியிட்டார் என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

இதில் அவரது பதிவுகள், சமய எதிர்ப்பு, சமய நம்பிக்கையின்மை மற்றும் நாத்திகத்தை ஊக்குவித்ததாக நீதிமன்றம் கருதியது. இதில் நாத்திகத்தை ஊக்குவித்தல் மற்றும் சமய எதிர்ப்புக்காக அலி அபு லுகும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த அக்டோபரில் நடைபெற்றது. இதில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காக அலி அபு காத்திருக்கிறார். அவர் தற்போது யேமன் எல்லைக்கு அருகில் நஜ்ரானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

மத கட்டுப்பாடுகள் தளர்வு

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருக்காமல் பிற தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை சவுதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளது. அந்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் முயன்று வருகிறார். இதற்காக மத அடிப்படையிலான கட்டுப்பாடுகளை தளர்த்தி, சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மதப் பழமைவாத தீர்ப்பு

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான எச்ஆர்டபிள்யு துணை இயக்குநர் மைக்கேல் பேஜ் விடுத்துள்ள அறிக்கையில், “சவுதி அரேபியாவை சகிப்புத் தன்மை மற்றும் சீர்திருத்த நாடாக சித்தரிக்க ஆட்சியாளர்கள் முயன்று வரும் வேளையில், அதற்கு முரணாக மதப்பழமைவாத நம்பிக்கையிலான தீர்ப்பு வெளியாகியுள்ளது. மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அங்கீகரிக்க வேண்டும். சமய எதிர்ப்பை குற்றமற்றதாக மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x