Published : 20 Dec 2021 01:58 PM
Last Updated : 20 Dec 2021 01:58 PM
பிலிப்பைன்ஸின் தென்கிழக்குப் பகுதிகளில் ராய் புயல் புரட்டிப் போட்டதில் இதுவரை 208 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய ராய் புயல் காரணமாக அந்நாட்டின் தென் பகுதிகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளன. மணிக்கு 160 கி.மீ. வரை வீசிய காற்று காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மீன்பிடிப் படகுகள் பல கடலில் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட நகரங்கள் இருளில் மூழ்கின.
புயலைத் தொடர்ந்து பெய்த கனமழைக்கு இதுவரை 208 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் வேண்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ரிச்சர்ட் கார்டன் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “பல பகுதிகளில் மின்சாரம் இல்லை, தகவல் தொடர்பு இல்லை, தண்ணீர் கூட இல்லை. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள்கூட பாதிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸில் வருடத்துக்கு 20 புயல்கள் வரை வீசுகின்றன. இதில் சமீப ஆண்டுகளில் வீசிய மோசமான புயலாக ராய் கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த 2013ஆம் ஆண்டு வீசிய புயலில் 6,000 பேர்வரை பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT