Published : 20 Dec 2021 12:52 PM
Last Updated : 20 Dec 2021 12:52 PM
லண்டன் : பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 12,133 பேருக்கு ஒமைக்ரான தொற்று ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டபின், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரேநாளி்ல் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும். பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் பாதிப்பு 37ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் 82ஆயிரத்து 886 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கரோனா பாதிப்பு ஒரு கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 387 ஆகஅதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 90 ஆயிரம் பேரும், வெள்ளிக்கிழமை 93 ஆயிரம் பேரும் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கூறுகையில் “ கரோனா வைரஸின் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் மிக,மிக வேகமாகப் பரவுகிறது. இப்போதுஅரசு வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பின் எண்ணிக்கைவிட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஒவ்வொருவரும் பரிசோதனைக்கு எடுக்கவில்லை. முடிவு கிடைக்க தாமதமாகும் என்பதால் வீட்டிலேயே இருக்கிறார்கள்”எனத் தெரிவித்தார்
பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் கட்டுக்கடங்காமல் போகும் சூழல் உருவாகும் என்பதால் அடுத்த சில நாட்களில்பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசுக்கு சுகாதாரத்துறையினர், அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்
இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டபின் தொற்று பரவல் அடுத்த 3 நாட்களில் ஒன்றரை மடங்கு அதிகரித்து, சமூகப் பரவலுக்கு இட்டுச் செல்கிறது என உலக சுகதாார அமைப்பு எச்சரித்துள்ளது.
பிரிட்டனில் 12 வயதுள்ள 89 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டனர், மற்ற வயதுபிரிவினரில் 81 சதவீதம்பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT