Published : 15 Dec 2021 07:54 PM
Last Updated : 15 Dec 2021 07:54 PM
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் காணொலி மூலம் கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் தொடக்கத்தில் பேசிய புதின், "21 ஆம் நூற்றாண்டில் ரஷ்யா, சீனா இடையேயான நட்புறவு இருநாட்டு ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணம். நம் இரு நாடுகளுக்கும் இடையே புதுமாதிரியான ஒத்துழைப்பு உருவாகியுள்ளது. இந்த ஒத்துழைப்பு இருநாடுகளும் மற்றவரின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை. நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளும் எல்லையை நிரந்த அமைதிப் பகுதியாக வைத்துள்ளோம். நாம் சிறந்த அண்டைநாட்டு நட்புறவை பேணுகிறோம்" என்றார்.
வரும் பிப்ரவரி மாதத்தில் ஜி ஜின்பிங்கை, சீனாவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக புதின் தெரிவித்தார். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் கலந்து கொள்வேன் என்றார்.
தொடர்ந்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது. எங்களின் தேசிய நலன்களைக் காக்கும் முயற்சிகளை ரஷ்யா எப்போதுமே ஆதரித்துள்ளது. அதேபோல், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை ரஷ்யா எதிர்த்துள்ளது என்றார்.
உக்ரைன் விவகாரம்:
அண்மைக்காலமாக ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக மேறத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. உக்ரன் அரசும், மாஸ்கோ ஆயிரக்கணக்கில் படையினர் எல்லையில் குவிக்கிறது. இது எங்கள் மீது ஏதோ தாக்குதல் முயற்சிக்கான ஆயத்தமாகவே தோன்றுகிறது எனக் கூறியுள்ளது. ஆனால், ரஷ்யாவோ மேற்கத்திய நாடுகளுக்கு ரூஸோஃபோபியா (Russophobia) உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ஜியின் சிறந்த நண்பர் புதின்:
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இதுவரை 30 முறை சந்தித்துள்ளனர். சீன அதிபர் ஜி, புதினை தனது சிறந்த நண்பர் என்றே எப்போதும் கூறுவார். இந்நிலையில், இப்போதைய சந்திப்பு பாதுகாப்பு ரீதியாக மட்டுமல்லாமல் ராஜாங்க ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை பீஜிங்கும், மாஸ்கோவும் சிரியா, ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் மீது ஒரே அணுகுமுறையைக் கொண்டுள்ளன. அண்மையில் கூட வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என இருநாடுகளும் ஐ.நா.விடம் ஒருமித்த குரல் எழுப்பின.
உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் நிமித்தமாக மேற்கத்திய நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் ரஷ்யா உரசிக் கொண்டுவரும் சூழலில் சீன அதிபருடனான இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ரஷ்யாவுடன் சீனா பாராட்டி வரும் பாதுகாப்பு ரீதியிலான நட்பு ஜப்பானையும், தென் கொரியாவையும் கலங்கச் செய்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT