Published : 13 Dec 2021 08:49 AM
Last Updated : 13 Dec 2021 08:49 AM
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரம்போசாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால்,லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தென் ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் 17,154 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரேநாளில் 37,875ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அதிபர் அலுவலகத்துக்கான அமைச்சர் மாண்டில் குங்குபெலே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
“ அதிபர் சிரில் ரம்போசாவுக்கு லேசான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே அதிபர் இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகின்றன.
அவருக்கு தென் ஆப்பிரிக்க ராணுவ சுகாதார மைய மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். கேப்டவுன் நகரில் உள்ள இல்லத்தில் அதிபர் ரம்போசா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதிபர் நல்ல உடல்நலத்துடன் இயல்பாகவே உள்ளார்.அடுத்த ஒரு வாரத்துக்கு அலுவலகப்பணிகளை துணை அதிபர் டேவிட் மபூசா கவனிப்பார்.
கடந்த வாரம் அதிபர் ரம்போசா உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க பிரதிநிதிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து வந்தபின்புதான் அதிபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், அதிபருடன் சென்ற மற்ற பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு அதிபர் ரம்போசா அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT