Published : 10 Dec 2021 11:41 AM
Last Updated : 10 Dec 2021 11:41 AM
கோவிட்-19 தடுப்பூசிகளைப் பதுக்கினால், நாம் நீண்டகாலத்துக்கு கரோனா வைரஸுடன் போராட வேண்டிய சூழலை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகில் 40 நாடுகளில் பரவிவிட்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தடுப்பூசிகள் மூலம் மனிதர்களுக்குக் கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து, ஒமைக்ரான் தாக்குகிறது, அதிலிருந்து தப்பிவிடுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் ஏற்கெனவே 2 தடுப்பூசிகளைச் செலுத்திய நாடுகள், அடுத்ததாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தங்கள் மக்களைத் தயார் செய்து வருகின்றன.
குறிப்பாக வளர்ந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு ஏற்கெனவே 70 சதவீதத்துக்கு மேல் இரு தடுப்பூசிகளைச் செலுத்திய நிலையில் தற்போது பூஸ்டர் டோஸையும் செலுத்த வலியுறுத்தி வருகிறது.
உலகில் ஒரு பகுதியில் உள்ள வளர்ச்சி குறைந்த, வறுமை நாடுகளில் இன்னும் மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசிகூட செலுத்த முடியாத நிலையில் இருக்கும்போது, வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துகிறார்கள். இதனால், தடுப்பூசிகளைப் பதுக்கும் சூழல் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு அஞ்சுகிறது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசித் துறை இயக்குநர் மருத்துவர் கேட்டே ஓ பிரையன் நேற்று பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
''ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் முதல் கட்டமாக வந்துள்ளது பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால், தீவிரமான கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இந்தத் தடுப்பூசிகளால் பயன் கிடைக்குமா என்பது தெரியாது. இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் தடுப்பூசிகளை நாம் பயன்படுத்தினால் மக்களுக்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கும் அதிகமான மாதங்கள் வரை கொடிய வைரஸிலிருந்து பாதுகாக்கும். குறிப்பாக சிறிய அளவிலான, நடுத்தரமான தொற்றைக் குறைக்க தடுப்பூசிகள் உதவும். அதிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன் அளிக்கும்.
ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை ஒமைக்ரான் வைரஸ் அழிக்கும் என்பதற்கு முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை, இன்னும் வர வேண்டியுள்ளது. அது கிடைத்தால்தான் ஒமைக்ரானை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதை அறிய முடியும்.
உலகளாவிய தடுப்பூசி பயன்பாடு சீராக இல்லை. இதனால் பணக்கார நாடுகள் தடுப்பூசிகள் மூலம் தங்களை மேலும் பாதுகாப்பை பலப்படுத்துகிறார்கள். ஏழை நாடுகள் தடுப்பூசி இல்லாமல் தடுமாறுகின்றன. தடுப்பூசிகளை நாம் பதுக்குவதால் கரோனா வைரஸுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்கும், அதனுடன் நாம் போராட வேண்டிய காலமும் நீண்டுகொண்டே செல்லும்.
ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசிகள் வேலை செய்யவில்லை என்று அர்த்தமாக எடுக்கக்கூடாது. வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி வேலை செய்யவில்லை என்றால், மக்கள் அதிகமான அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள் என்றுதான் அர்த்தம்''.
இவ்வாறு மருத்துவர் ஓ பிரையன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT