Published : 08 Dec 2021 12:19 PM
Last Updated : 08 Dec 2021 12:19 PM

ஒமைக்ரானால் தொற்றின் தீவிரமும் உயரும்; உயிரிழப்பும் அதிகரிக்கும்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

கோப்புப்படம்

பிரசெஷல்ஸ்

ஒமைக்ரான் வைரஸால் வரும் வாரங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரிக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கான நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்த செலுத்தப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை, தடுப்பூசி செலுத்தாதவர்களும் அதிகமாக இருப்பதால், வரும் வாரங்களில் பாதிப்பு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகில் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதுவரை 39 நாடுகளுக்குப் பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. டெல்டா வைரஸின் பாதிப்பிலிருந்தே மீளாத ஐரோப்பிய நாடுகள், ஒமைக்ரான் வைரஸ் குறித்து அஞ்சியுள்ளன. இதனால், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கும், விமானங்களுக்கும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு அடுத்துவரும் வாரங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒமைக்ரான் தொற்றின் தீவிரம் அதிகரிக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும், உயிரிழப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குநர் ஆன்ட்ரியா அமான் பிரசெல்ஸ் நகரில் நேற்று ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினார்.

அவர் கூறியதாவது:

“வரும் வாரங்களில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரிக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ஐசியுவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். உயிரிழப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆதலால், விரைவாகவோ மக்கள் கூடுமிடங்களான மதுபார்கள், ரெஸ்டாரன்ட்கள் போன்றவற்றை மூடி லாக்டவுன் விதிப்பதும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதும் அவசியம். ஒமைக்ரான் வைரஸால் ஒட்டுமொத்தச் சூழலும் கவலைக்கிடமாக மாறக்கூடும்.

ஐரோப்பிய யூனியனில் தற்போது 19 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கிறது. 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை ஒமைக்ரான் வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டதாகவோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ சம்பவம் ஏதும் நடக்கவில்லை, அறிக்கை வரவில்லை. ஆனால், தொடக்க நிலையின் சூழலை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது” எனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான சுகாதார ஆணையர் ஸ்டெல்லா கைரியாகிடெஸ் கூறுகையில், “ஐரோப்பிய யூனியனில் 6 நாடுகளில் ஒட்டுமொத்த தடுப்பூசி செலுத்துவது 55 சதவீதத்துக்கும் கீழாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆஸ்திரியா நாடு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்த நிலையில் இந்த வாரத்துடன் முடிகிறது. இதில் கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வெளியுலகிற்கு அதிகமாக வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

போலந்து நாட்டு அரசாங்கம், பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x