

எதிர்காலங்களில் வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தமானதாக இருக்கும் என தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகில் கரோனா தொற்று அறியப்பட்டது. இதுவரை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 50 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கும் மேலானோர் உயிரிழந்தனர். கரோனாவால் உலகளவில் பல ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்களின் வாழ்க்கை தலைகீழாக சரிந்துள்ளது என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலங்களில் வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தமானதாக இருக்கும் என தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கரோனாவுக்கு எதிராக முதன்முதலில் தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராஜெனிக்கா மருந்து நிறுவனம்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின், தடுப்பூசி துறை பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
உண்மை என்னவென்றால், உலகம் எதிர்காலங்களில் சந்திக்கும் பெருந்தொற்று கரோனாவை விட மிகவும் மோசமானதாக, உயிர்க்கொல்லியாக இருக்கலாம். நாம் சந்திக்கும் உயிரை அச்சுறுத்தும், வாழ்வாதாரத்தை முடக்கும் கடைசி வைரஸ் கரோனா என்று கூறிவிட முடியாது. அதனால், உலகம் அடுத்தடுத்த பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் மேற்கொண்ட அறிவியல் முன்னேற்றங்களை, நமக்குக் கிடைத்த அறிவை நாம் தொலைத்துவிடக் கூடாது.
கரோனா தடுப்பூசி, குறைந்த வருவாய் கொண்ட நாடுகளைச் சென்றடையவில்லை என்பதும் வளமான நாடுகள் பூஸ்டர் டோஸ்களைப் போட்டு வருகின்றன என்பதும் வேதனைக்குரியது. தடுப்பூசி விநியோகத்தில் சமத்துவம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒமைக்ரானின் ஸ்பைக் புரதங்களில் உள்ள திரிபுகள், கரோனா தொற்றை வேகமாகப் பரவச் செய்யக்கூடியது. அந்தப் புரதத்தில் மேலும் மேலும் நிகழும் மாற்றங்களால் தடுப்பூசிகளாலோ அல்லது இயல்பாக ஏற்பட்ட தொற்றாலோ மனித உடலில் உருவான ஆன்ட்டிபாடிக்களின் செயல்திறன் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் குறித்து பேசிய அவர், "இங்கு ஒமைக்ரான் உள்ளது. அது எப்போது சமூகப் பரவலாக மாறுகிறதோ அப்போது இங்கிலாந்தில் அடுத்த அலை ஏற்படும். அதனால், வெளிநாட்டில் இருந்து வருவோரை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என்றார்.