Published : 03 Dec 2021 07:24 PM
Last Updated : 03 Dec 2021 07:24 PM
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று இதுவரை பல்வேறு உலக நாடுகளிலும் பரவிவிட்டது. இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று இதுவரை உறுதியாக யாரும் சொல்ல முடியாத சூழலில் இதுவரை இந்த வகை உருமாறிய கரோனாவால் உயிரிழப்பு இல்லை என்ற ஆறுதல் தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மெய்ர் பேசினார். அப்போது அவர், "இதுவரை உலக நாடுகள் எதுவுமே ஒமைக்ரான் திரிபால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யவில்லை.
நாங்கள் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். இன்னும் அதிகமான நாடுகள் ஒமைக்ரான் பாதிப்புக்கான மரபணு வரிசைப்படுத்துதல் சோதனயை செய்யும்போது அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவாகும்.
அப்போது நோயின் தாக்கம் குறித்து தகவல் கிடைக்கும். அதேபோல், நோயினால் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் தகவலும் கிடைக்கலாம் என நம்புகிறோம். ஆனால், உண்மையில் ஒமைக்ரானால் உயிரிழப்பு இல்லை என்ற செய்தியையே விரும்புகிறோம். ஒமைக்ரான் குறித்து அஞ்சுவதைவிட மக்கள் இப்போதும் கூட டெல்டா வைரஸ் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏனெனில் இதுவரை பதிவாகி வரும் 99.8% தொற்றுக்கு டெல்டா திரிபு மட்டுமே காரணமாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை இனி வரும் நாளில் அதிகரிக்கவும் செய்யலாம். ஏன் அதுவே கூட ஆதிக்கம் செலுத்தும் உருமாற்றமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு டெல்டா தான் ஆபத்தான திரிபாக உள்ளது. டெல்டாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்.
இப்போதைக்கு உலகம் முழுவதும் இருந்து ஒமைக்ரான் பற்றிய தகவலைத் திரட்டி வருகிறோம். அது குறித்த தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வார்கள். பின்னர் ஒரு மதிப்பீட்டுக்கு வருவார்கள். அதற்கு சிறிது காலம் ஆகலாம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT