Published : 03 Dec 2021 03:40 PM
Last Updated : 03 Dec 2021 03:40 PM
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது, அவர்களைக் கட்டாயத் திருமணம் செய்யக்கூடாது, கணவனை இழந்த பெண்கள் கணவரின் சொத்துகளில் பங்கு பெற முடியும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை போன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் என தலிபான்கள் தரப்பில் அறிவித்தாலும் பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள்.
பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை, அமைச்சரவையில் பெண்கள் இல்லை, உயர்கல்விக் கூடங்களில் பெண்களுக்குத் தனி வகுப்பறைகள், மகளிர் மேம்பாட்டுத் துறையில் கூட பெண்கள் வேலை பார்க்கத் தடை, பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்றத் தடை எனப் பல கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு தலிபான்கள் விதித்துள்ளனர்.
பெண்களுக்கு சம நீதி, சம உரிமை வழங்காதது, மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுவது போன்றவற்றால் சர்வதேச அளவில் தலிபான்கள் அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க மறுத்து ஒதுக்கி வைத்துள்ளன. தூதரக உறவுகளைப் பெரும்பாலான நாடுகள் தவிர்த்துவிட்டன. இதனால் தனித்து விடப்பட்ட நாடாகவே ஆப்கன் இருந்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச நெருக்கடிக்குப் பணியும் விதமாக முதல் கட்டமாக பெண்களுக்கு உரிமைகள் தலிபான்கள் ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான்கள் அரசு இன்று ஆணை வெளியிட்டுள்ளனர்.
அதில், ''பெண்களை ஒரு சொத்தாகக் கருதக்கூடாது. பெண்களைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களின் சம்மதம் பெற்ற பின்புதான் திருமணம் நடத்தப்பட வேண்டும். பெண்களைச் சொத்தாகக் கருதி அவரைக் கைமாற்றுவதோ, அல்லது விற்பனை செய்வதோ கூடாது. கணவரை இழந்த பெண்களுக்குக் கணவரின் சொத்தில் பங்கு வழங்கிட வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெண்களுக்குக் கல்வி உரிமை வழங்குவது குறித்தோ அல்லது, வெளியே சென்று வேலை பார்ப்பது குறித்தோ எந்தவிதமான கருத்தும் இல்லை. இது சர்வதேச சமூகத்தை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1996-2001ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டனர். முகத்தை முழுமையாக மூடியிருக்கும் ஆடை அணிந்துதான் பாடசாலைக்கு ஆண் துணையுடன்தான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT