Published : 30 Nov 2021 03:52 PM
Last Updated : 30 Nov 2021 03:52 PM

ஒமைக்ரான் வைரஸ்: மாடர்னா மருந்து நிறுவனமும் கைவிரிப்பு

பிரதிநிதித்துவப்படம்

ஹாங்காங்

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக எங்கள் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி பெரிய அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுவது சந்தேகம் என மாடர்னா நிறுவனம் கைவிரித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகத் தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படாது என ஃபைஸர், பயோ என்டெக் நிறுவனங்கள் கைவிரித்துவிட்ட நிலையில், தற்போது மாடர்னா நிறுவனமும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள்தான் அதிக அளவில் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ள கருத்து மக்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சர்வதேசப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தையும் மாடர்னா நிறுவனத்தின் அறிவிப்பு ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் 2 டாலர் அளவுக்குக் குறைந்தது, டாலருக்கு நிகரான ஆஸ்திரேலிய கரன்சி மதிப்பு மோசமான சரிவைச் சந்தித்தது.

மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பான்செல் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “டெல்டா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பைப் போன்று இருக்குமா எனத் தெரியவில்லை. டெல்டா திரிபு வைரஸுக்கு எதிராகச் செயல்பட்ட அளவு தடுப்பூசிகள் செயல்படலாம். ஆனால், ஒமைக்ரான் வைரஸ் குறித்து அதிகமான புள்ளிவிவரங்கள் கிடைத்தால் மட்டுமே தெளிவாக எதையும் கூற முடியும். ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி சிறப்பாகச் செயல்பட வாய்ப்பிருக்காது” எனத் தெரிவித்தார்.

ஒமைக்ரான் வைரஸுக்கு அச்சப்பட்டு மீண்டும் லாக்டவுன் நடவடிக்கையை எடுக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அதேநேரம், பிரிட்டனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் ஒமைக்ரான் வைரஸ் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சூழல் மேலும் மோசமாகாமல் இருக்கும் வகையில், தனது எல்லைகளை சீல் வைத்துள்ளது ஹாங்காங் அரசு.

குறிப்பாக அங்கோலா, எத்தியோப்பியா, நைஜீரியா, ஜாம்பியா ஆகிய நாட்டினர் நாட்டுக்குள் வருவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி ஆகிய நாட்டினர் வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் நாட்டுக்குள் வரத் தடை விதித்துள்ளது ஹாங்காங் அரசு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x