Published : 30 Nov 2021 03:13 PM
Last Updated : 30 Nov 2021 03:13 PM

ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரும் அச்சறுத்தலாக மாறும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோப்புப்படம்

ஜெனிவா

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று முதல் கட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் உருமாற்றம் அடைந்து தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒமைக்ரான் வைரஸ் குறித்த முதல்கட்டத் தொழில்நுட்ப ஆய்வறிக்கையை அதன் உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஒமைக்ரான் வைரஸ் குறித்து கணிசமான நிச்சயமற்ற தன்மைகள் காணப்படுகின்றன. அதிகமான உருமாற்றம் அடையும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸால், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியும். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு அதிவேகமாகப் பரவக்கூடிய தன்மையைப் பெறும்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ்.

இந்த வைரஸின் குணங்களின் அடிப்படையில், எதிர்கலாத்தில் இதன் பரவல் வேகம் இருக்கும். உருவாகும் இடம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்தும், பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தும் தீவிரமான விளைவுகளை ஒமைக்ரான் ஏற்படுத்தக்கூடும். உலக அளவில் ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தல், ஆபத்து என்பது அதிகமாகவே இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் ஆபத்தானதாக இருக்கும் என அஞ்சினால், தடுப்பூசி குறைவாகச் செலுத்தியுள்ள நாடுகளில் உள்ள மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை எந்தவிதமான உயிரிழப்பு குறித்தும் இல்லை''.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபின் உலக அளவில் ஏராளமான நாடுகள் விமானப் போக்குவரத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தடை செய்துள்ளன. வெளிநாட்டினர் யாரும் வருவதற்கு ஜப்பான், இஸ்ரேல் நாடுகள் தடை விதித்துள்ளன.

மொரோக்கோ நாடு தங்கள் நாட்டுக்குள் வரும் அனைத்து விமான சேவையையும் தடை செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், டென்மார்க், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் நேற்று ஸ்பெயினிலும் கண்டுபிடிக்கப்பட்டதால், ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x