Published : 28 Nov 2021 03:00 PM
Last Updated : 28 Nov 2021 03:00 PM

ஓமைக்ரானைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளுடனும் எல்லைகளை மூடும் இஸ்ரேல்

இஸ்ரால் நாட்டின் விமான நிலையம் | கோப்புப் படம்.

ஜெருசலேம்

கரோனாவின் புதிய உருமாற்ற வைரஸ் ஓமைக்ரானைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் இன்று மாலை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

''புதிய உருமாற்ற வைரஸான ஓமைக்ரான் கவலைக்குரியது மற்றும் மிகவும் ஆபத்தானது என்பதால் நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்'' என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

முதன்முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இ்ந்த புதிய வைரஸ் ஏற்கெனவே பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா மண்டலத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, பிரிட்டன் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளி்ல் இருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ளது.

இஸ்ரேல், கோவிட் காரணமாக நீண்ட காலமாக மூடியிருந்த தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக வேண்டி நான்கு வாரங்களுக்கு முன்புதான் திறந்தது, தற்போதும் மீண்டும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எல்லைகள் மூடும் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் நாட்டின் உயரதிகாரிகள் கூறியதாவது:

''கரோனா வைரஸின் புதிய உருமாற்ற ஓமைக்கிரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் இஸ்ரேல் அவசர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அனைத்து வெளிநாட்டினருக்கும் இஸ்ரேல் தனது எல்லைகளை மூட உள்ளது.

சிறப்புக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சிலரைத் தவிர வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலின் கோவிட் பணிகளை மேற்பார்வையிடும் அமைச்சரவைக் குழுவால் இந்த நடவடிக்கை முடிவு செய்யப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை முழு அமைச்சரவையால் இந்த நடவடிக்கை முடிவு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் மேலும் இரண்டு பேரிடம் சந்தேகத்திற்கிடமான வகையில் இந்நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளன, தடுப்பூசி போடப்பட்ட மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அது கூறியது. பின்னர் அரசாங்கம் மற்றொரு நபரிடம் சந்தேகத்திற்குரிய வகையில் நோய்த்தொற்று இருக்க வாய்ப்பிருப்பதை அறிவித்தது.

பிரதமர் நெப்தாலி பென்னட் எச்சரிக்கை

புதிய கோவிட் -19 உருமாற்ற வைரஸின் நோய்த்தொற்றை அடையாளம் கண்டு, அதிக தடுப்பூசி போடப்பட்ட மக்களைப் பாதுகாக்க இது ஏற்கெனவே வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடர்ச்சியான அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது இஸ்ரேல்.

இதுகுறித்து கடந்த வெள்ளியன்று பிரதமர் நெப்தாலி பென்னட் கூறுகையில் ''புதிய உருமாற்ற வைரஸான ஓமைக்ரான் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இது மிகவும் கவலைக்குரியது.

எனவே நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கிறோம், நோய்த்தொற்றை கண்காணிக்கவும் தடுக்கவும் இஸ்ரேல் 10 மில்லியன் பிசிஆர் பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்யும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x