Published : 26 Nov 2021 02:36 PM
Last Updated : 26 Nov 2021 02:36 PM
தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
இந்தப் புதிய வைரஸ் ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குக் கூட இந்தப் புதிய வைரஸ் தாக்கியுள்ளது.
இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில், அறிவியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “100 வகையான வைரஸ் ஜீன்கள் உள்ளன. ஆனால், இந்தப் புதிய வகை வைரஸ் குறித்து இதுவரை தெரியாது. இந்த வைரஸ் அதிகமாக உருமாற்றம் அடையுமா என்பதும் தெரியாது. அதிகமான உருமாற்றம் அடையும்போது, இந்த வைரஸின் தாக்கம், எவ்வாறு மனிதர்கள் உடலில் பாதிக்கிறது என்பது தெரியவரும்.
தற்போதுள்ள சூழலில் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸின் உருமாற்றம், அதனுடைய ஸ்பைக் புரோட்டீன் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். புதிய வகை வைரஸ் குறித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது உலக அளவிலான விஞ்ஞானிகள் பங்கேற்று ஆலோசிக்கும்போது மேலும் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். ஆனால், நம்முடைய கேள்விகளுக்கு எப்போது பதில் கிடைக்கும் என்பதற்கு காலவரையறை இல்லை. தற்போது இந்தப் புதிய வகை வைரஸைக் கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 27 சதவீத சுகாதாரத்துறையினர் மட்டுமே தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியுள்ளனர். மற்றவர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களாகத் தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 48 சதவீதம் திடீரென அதிகரித்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT