Published : 24 Nov 2021 09:35 AM
Last Updated : 24 Nov 2021 09:35 AM
உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உளவு மென்பொருளான பெகாசஸை தயாரித்த இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது அமெரிக்காவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் வழக்கு தொடர்ந்துள்ளது.
முன்னதாக, பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்தனர். உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களும் பெருமளவில் ஒட்டுக்கேட்கப்பட்டது தெரியவந்தது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தால் இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது.
இந்நிலையில் தான், உளவு மென்பொருளான பெகாசஸின் தயாரிப்பு நிறுவனமான இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் மீது அமெரிக்காவின் செல்போன் நிறுவனமான ஆப்பிள் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், ஐ போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், இஸ்ரேலின் என்எஸ்ஓ. நிறுவனம் தனது செயலிகளை ஐ போன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் தங்களின் உபகரணங்கள் 1.65 பில்லியன் அளவில் பயன்பாட்டில் உள்ளதாகவும் அதில் ஐபோன்கள் மட்டுமே ஒரு பில்லியன் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து என்எஸ்ஓ பெரும் சதி செய்துள்ளதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனமோ உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளைக் குறிவைக்கும் பாலியல் குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் கண்டுபிடிக்க அரசாங்கங்களுக்கு உதவும் செயலுக்காக மட்டுமே தாங்கள் பெகாசஸை உருவாக்கியதாக தொடர்ந்து தங்கள் தரப்பு நியாயத்தைக் கூறி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT