Published : 04 Mar 2016 06:05 PM
Last Updated : 04 Mar 2016 06:05 PM
ஏமன் நாட்டில் முதியோர் இல்லமொன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெள்ளியன்று நடத்திய தாக்குதலில் 4 இந்திய நர்ஸுகள் உட்பட 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இங்குள்ள ஏடன் நகரின் தென்பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்படுகிறது. அந்த இல்லத்தில் இந்திய நர்ஸுகள் பணியாற்றி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய 4 பேர் முதியோர் இல்ல பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசினர். இதில் முதியோர் இல்லத்தில் பணியாற்றிய 4 இந்திய நர்ஸுகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
முதலில் 4 நர்ஸ்களை தனியே பிரித்து சுட்டுக் கொன்றனர், பிறகு மற்ற முதியோர்களைக் கையைக் கட்டி நிறுத்தி துப்பாக்கியால் சுட்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருப்பதாக அரசு வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
இதனிடையே ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக வேறு சில வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஏமன் நாட்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். தாக்குதலில் உயிரிழந்த நர்ஸுகள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கும்படி ஏமனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏமன் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டு அதிபர் மன்சூர் ஹைதி சன்னி பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு சவுதி அரேபியா ஆதரவு அளிக்கிறது. அதேநேரம் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் அரசு ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT