Published : 22 Nov 2021 03:28 PM
Last Updated : 22 Nov 2021 03:28 PM
ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் 95 சதவீதம் பேருக்குப் போதுமான உணவு இல்லை. 2.30 கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். யுனிசெஃப் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் 1.40 கோடி குழந்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது, 50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் டோலோ சேனலுக்கு யுனிசெஃப்பின் ஆதரவு மற்றும் மக்கள் நலக்குழுவின் தலைவர் சாம் மோர்ட் அளித்த பேட்டியில், “சர்வதேச உலக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம். ஆனால், ஆப்கனில் கொண்டாட முடியாது, அங்கு குழந்தைகள் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
1.40 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சம் குழந்தைகளுக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சாவின் பிடியில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
ஆப்கன் ஊடகங்கள் கூறுகையில், “ஆப்கனில் பொருளாதாரம் மோசமடைந்ததால், ஏராளமான குழந்தைகள் காபூல் தெருக்களில் வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறிய குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டுச் சிறிய வேலைக்குச் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி உதவக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சர்வதேச உதவிகள் வராவிட்டால், ஆப்கனில் சூழல் இன்னும் மோசமாகும், குழந்தைகள் நிலை கவலைக்கிடமாகும்” எனத் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT