Published : 16 Nov 2021 09:14 AM
Last Updated : 16 Nov 2021 09:14 AM
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டிகள் இருக்கலாம் ஆனால் அது தெரிந்தோ, தெரியாமலோ மோதலாக மாறிவிடக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் காணொளி வாயிலாக சந்தித்தனர். திங்கள்கிழமை நடந்த இந்த சந்திப்பு சர்வதேச ஊடக கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக சீன அதிபருடன் காணொளி சந்திப்பு நடந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வருகிறார். அதனாலேயே இரண்டாவது முறையாகவும், இந்த சந்திப்பு காணொளியில் நடந்துள்ளது.
சந்திப்பின்போது பைடன், "நமது நாடுகளுக்கு இடையே போட்டிகள் இருக்கலாம். ஆனால், இது ஒருபோதும் தெரிந்தோ, தெரியாமலோ மோதலாக மாறிவிடக் கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் வெளிப்படையாக விவாதம் நடத்திக் கொள்ளலாம்" என்று கூறினார்.
அதேபோல், எனது பழைய நண்பர் பைடன் என்று உரையைத் தொடங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "அமெரிக்கா, சீனா என இரு பெரும் வல்லரசுகளுக்கும் இடையே இன்னும் சிறப்பான தொடர்புநிலை உருவாக வேண்டும். சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் மேம்படுத்த வேண்டும்" என்றார்.
இந்த ஆன்லைன் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை 2 மணி நேரம் வரை நடைபெற்றது. சீனா, தைவான் மோதல் வலுவடைந்துவிடக் கூடாது என்ற அக்கறையை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது. தைவானின் தற்காப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா ஆதரிப்பதாக பைடன் தெரிவித்தார்.
வெளியுறவுக் கொள்கைகளில் தவறான கணிப்புகளை தவிர்த்துக்கொள்ள ஏதுவாக அமெரிக்கா, சீனா பொதுவான ஒரு பாதுகாப்பு அம்சத்தை வகுக்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.
கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற கூட்டத்தில் சீன அதிபர் கலந்து கொள்ளாததற்கு பைடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அதேபோல் ரோம் நகரில் நடந்த ஜி 20 மாநாட்டில் சீனா பங்கேற்காததற்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT