Published : 14 Apr 2014 12:42 PM
Last Updated : 14 Apr 2014 12:42 PM
தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மாயமானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், தற்போது ஆளில்லா நீர்மூழ்கி பயன்படுத்தப்பட இருக்கிறது.
இது குறித்து தேடல் பணியை மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கடற்படையின் தலைமை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் கூறுகையில், “ கடந்த ஆறு நாட்களாக கடலுக்கு அடியிலிருந்து பதிவாகி வந்த சிக்னல்கள் நின்றுவிட்டது. இது கடலுக்கு அடியில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் என்று நாங்கள் கருதுகிறோம்.
38-ம் நாளான இன்று விமானத்தை தேடும் முயற்சியில், கடலுக்கு அடியில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது.
கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடும் முயற்சியில், புளூபின் 21 என்ற ஆளில்லா நீர்மூழ்கி இன்று மதியத்திற்குள் பயன்படுத்தப்படும். இந்த ஆளில்லா நீர்மூழ்கியுடன் சைட் ஸ்கேன் சோனார் கருவி இணைக்கப்படும். இந்த கருவி ஒலி வடிவில் வெளியாகும் சப்தங்களை கொண்டு அதன் படத்தினை உருவாக்கி வெளியிடும் தொழில்நுட்பம் கொண்டது. ஆளில்லா நீர்மூழ்கியுடன் கடலின் தரைப் பரப்பிற்கு இந்த கருவி சென்றடைய 16 மணி நேரம் ஆகும், அடுத்த இரண்டு மணி நேரங்களில் இவை தனது பணிகளை மேற்கொள்ளும்.
இது வரை, விமானத்தின் கருப்புப் பெட்டி ஒலிப்பதிவுக் கருவிகளிலிருந்து வரும் சிக்னல்களை கவனித்து அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில், கப்பலால் இழுத்துச் செல்லப்பட்ட கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.
இன்று முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' தனது இழுவைக் கருவி மூலம் தேடும் முயற்சியை நிறுத்திக்கொள்ளும். இனி ஆளில்லா நீர்மூழ்கியான, புளூபின் 21 இந்த தேடல் வேலையை மேற்கொள்ளும்.” என்று அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாக 'சோனார்' நீர்முழ்கி இயந்திரத்தில் சில இடைவேளைகளில் பதிவான சிக்னல்கள் தற்போது நின்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கருப்புப் பெட்டியின் பேட்டரி காலாவதி ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT