Last Updated : 09 Mar, 2016 04:59 PM

 

Published : 09 Mar 2016 04:59 PM
Last Updated : 09 Mar 2016 04:59 PM

அணுக் கதிர்வீச்சு பாய்ந்த உணவை 30 ஆண்டுகளாக உட்கொண்டிருக்கும் மக்கள்: கிரீன்பீஸ் தகவல்

செர்னோபில் அணு உலை வெடித்து 30 ஆண்டுகள் ஆகியும் கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த 30 ஆண்டுகளாக கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட உணவு, குடிநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் அவலநிலை நீடிப்பதாக கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

30 ஆண்டுகள் அல்ல இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கதிர்வீச்சின் தாக்கம் போகப்போவதில்லை என்கிறது கிரீன்பீஸ் ஆய்வு.

1986-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகின் கருப்பு தினமாக மாறிப்போன அன்றைய செர்னோபில் விபத்து என்று அழைக்கப்படும் அணு உலை வெடிப்பினால் விளைந்த ஆபத்தான அணுக்கதிர் வீச்சு ஐரோப்பாவின் பல பகுதிகளில் தாக்கம் செலுத்தியது.

செர்னோபில், புகுஷிமா அணு உலை துயரங்கள் குறித்த தங்களது ஆய்வறிக்கையில் கிரீன்பீஸ் கூறும்போது, “கதிர்வீச்சின் தாக்கம் அவர்கள் உண்பது, அருந்துவது, அவர்கள் குளிர்காய எரிக்கும் மரம் என்று அனைத்திலும் பாய்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க போதுமான நிதி இல்லை, இதனால் அணுக்கதிர் வீச்சு பாய்ந்த இடங்களில் வசிக்கும் மக்களின் ஆரோக்கிய பாதிப்பு மேலும் அதிகரிக்கவே செய்யும்” என்று எச்சரித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு எழுச்சியினாலும் ரஷ்யா மற்றும் பெலாரசில் கடும் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாலும் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை எனவே அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள்? என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

அணுக்கதிர் வீச்சினால் பாதிப்படைந்த பகுதிகளில் தானியங்களில் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளது, சுமார் 50 லட்சம் மக்கள் தொகுதியினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“இனி வரும் காலங்களிலும் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கவே செய்யும், செர்னோபில் அணு உலை வெடிப்புக்குப் பிறகு 30 ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தைகள் கூட அணுக்கதிர் வீச்சு பாய்ந்த பாலையே உட்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று கிரீன்பீஸ் எச்சரிக்கிறது.

செர்னோபில் கதிர்வீச்சினால் சுற்றியுள்ள காடுகளில் அதன் தாக்கம் இன்னமும் தேங்கியுள்ளது, நிச்சயம் இது அவ்வளவு எளிதில் அகன்று விட வாய்ப்பில்லை. அடுத்த பல பத்தாண்டுகள் அல்ல, வரும் பல நூற்றாண்டுகளுக்கும் இதன் தாக்கம் மறைவது கடினம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

செர்னோபில், புகுஷிமா அணுக் கதிர்வீச்சு தாக்கப்பகுதிகளில் உள்ள மருத்துவர்கள், இப்பகுதிகளில் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அறிக்கையில், உக்ரைனின் ரிவ்னே பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் தாயார் ஹலினா சமுலேவிச் என்பவரை உதாரணமாகக் காட்டி, தனது குழந்தைகளுக்கு கதிர்வீச்சு தாக்க உணவையே அளிக்க வேண்டிய நிலைமை உள்ளது, இங்கு அனைத்தும் கதிர்வீச்சு பாதிக்கப்பட்டதுதான் இது தனக்கு கவலை அளிக்கிறது, ஆனால் என்ன செய்ய முடியும்? என்று அவர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x