அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி: அவசர கால அனுமதி கோரி விண்ணப்பம்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி: அவசர கால அனுமதி கோரி விண்ணப்பம்
Updated on
1 min read

அமெரிக்காவில் 18 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்கு நிறுவனமான ஆக்குஜன் விண்ணப்பித்துள்ளது.

அண்மையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரக் கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கியது. மேலும், தாம் அங்கீகரித்துள்ள கோவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படுகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனால், இனி இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு ஐரோப்பிய பிராந்தியங்களுக்குச் செல்வோருக்கு எவ்விதமான பயணத் தடையும் இருக்காது. இதனால், மாணவர்கள், வர்த்தகர்கள் பெரிதும் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

கோவாக்சின் தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக 77.8% திறன் வாய்ந்தது. டெல்டா திரிபுக்கு எதிராக 65.2% பாதுகாப்பு அளிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் 18 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்கு நிறுவனமான ஆக்குஜன் விண்ணப்பித்துள்ளது.

இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிளினிக்கல் லீடான டாகர் ரேச்சல் எல்லா, தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் எப்.டி.ஏவிடம் கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் 18 வயதுக்கும் கீழே உள்ளவர்களுக்கு அவசரக் கால பயன்பாடு அடிப்படையில் செலுத்த அனுமதி கோரியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் வல்லுநர்கள் குழு பச்சைக்கொடி:

ஏற்கெனவே, இந்தியாவில் உள்ள 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதின்வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசியைப் பரிந்துரை செய்வது குறித்து வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து, இறுதி முடிவை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எடுக்கும். ஒருவேளை அனுமதியளிக்கப்பட்டால், குழந்தைகளுக்கான 2-வது தடுப்பூசி புழக்கத்துக்கு வரும்.

இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே ஜைடஸ் கெடிலா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான 3 டோஸ்கள் கொண்ட ஜைகோவ்-டி மருந்துக்கு அனுமதியளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in