Published : 05 Nov 2021 11:37 AM
Last Updated : 05 Nov 2021 11:37 AM
சீனாவின் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை சந்தித்தாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கோபம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
சீனாவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டதன் மூலம் முதல் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது. ஜாக் மா அலிபாபா நிறுவனத்தின் தலைமை பதவியில இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 24, ஜாக் மாவின் நிறுவனக் குழுமங்களில் ஒன்றான ‘அன்ட் குழும’த்தின் (Ant group) பொதுப் பங்கு வெளியீடு நடத்தப்பட இருந்தது. இதையொட்டி ஷாங்காயில் நடந்த நிகழ்வில் ஜாக் மா பேசிய பேச்சுதான் அவரை மாயமாக்கியது.
“சீன வங்கிகள் அடகு கடை மனநிலையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் ரயில் நிலையத்தை நிர்வகிக்கும் வழிமுறையை விமானநிலையத்தை நிர்வகிக்கப் பயன்படுத்துகின்றனர்” என்று டிஜிட்டல் நிதி செயல்பாடுகள் தொடர்பாக சீன வங்கிகளின் செயல்பாடுகளை அந்த நிகழ்வில் அவர் விமர்சித்தார்.
இது சீன வங்கி அதிகாரிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அதிபர் ஜி ஜின்பிங் காதுக்குச் சென்றது. மறுநாளே ஜாக் மாவுக்கும் அன்ட் குழுமத்தின் சில நிர்வாக அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அன்ட் குழுமத்தின் பொதுப் பங்கு வெளியீடும் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜாக் மா மாயமானார்.
அடுத்த சில மாதங்களில் அவரது அலிபாபா குழுமம் மீதும் விதிமுறை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அந்நிறுவனமும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. கடும் இழப்பை ஜாக் மா சந்திக்க நேரிட்டது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி அவரது நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1366 பில்லியன் டாலராக இருந்து. தற்போது அது 696 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் வரை பொது வெளியில் பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜாக் மா, திடீரென மாயமானார். தொடர்ந்து சில மாதங்களுக்கு மேலாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்குகொள்ளவில்லை. வெளியில் தலைகாட்டவும் இல்லை.
இதையடுத்து ஜாக் மாவை, சீன அரசுதான் கடத்திவைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. அரசு, அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் பரவின.இதனைத் தொடர்ந்து அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் சார்ந்து பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் ஜாக் மா அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜனவரியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சீனாவை விமர்சித்தார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கு சீனாவைக் குற்றம் சாட்டினார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான பதட்டம் ஏற்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் ஜனவரி 9-ம் தேதி அன்று சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.
தனது முன் அனுமதியின்றி ட்ரம்ப்பைச் சந்தித்தது குறித்து பெய்ஜிங் சீனா அதிபர் ஜி ஜின்பிங் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT