Published : 01 Mar 2016 08:41 PM
Last Updated : 01 Mar 2016 08:41 PM
பாகிஸ்தானிடம் உள்ள அணுஆயுதங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா கண்டித்துள்ளது.
அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாடு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உட்பட உலகத் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து எப்16 ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் தற்போது வாஷிங்டனில் முகாமிட்டுள்ளார்.
அங்கு அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியை சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
அப்போது ஜான் கெர்ரி கூறியதாவது:
அமெரிக்கா, ரஷ்யா இடையே நிலவிய போட்டியால் இரு நாடுகளும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணுஆயுதங்களை குவித்து வைத்திருந்தன. ஆனால் பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகளும் அணுஆயுதங்களைக் குறைத்தன தற்போது அமெரிக்கா, ரஷ்யா இடையே தலா 1500 அணுஆயுதங்கள் மட்டுமே உள்ளன.
இதேபோல உலக நன்மையை கருத்திற் கொண்டு பாகிஸ்தானும் தன்னிடம் உள்ள அணுஆயுதங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
மேலும் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு சர்தாஜ் ஆசிஷ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
அணுஆயுத விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் மட்டும் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது. இதே கட்டுப்பாடு இந்தியாவுக்கும் விதிக்கப்பட வேண்டும். தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா அதிக ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வருகிறது. இதை அமெரிக்கா கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் எதிர்ப்பை மீறி எப் 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பதை வரவேற்கிறோம். இதன்மூலம் பாகிஸ்தான் பலம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அணுஆயுதங்கள் தீவிரவாதிகள் கைப்பற்றக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதன் காரணமாகவே அணுஆயுதங்களைக் குறைக்க அந்த நாட்டிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT