Published : 02 Nov 2021 11:29 AM
Last Updated : 02 Nov 2021 11:29 AM
ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தன்னிடம் தலிபான்களுக்கு எதிராக சாகும்வரை போராடத் தயார் என்று கூறியதாகவும் ஆனால் அடுத்த நாளே அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது அந்நாடு வந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறியது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகின. இறுதியாக அஷ்ரப் கனி குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்ததும் உறுதியானது.
பின்னர் இதுபற்றி விளக்கம் அளித்த அவர் ‘‘காபூலை விட்டு வெளியேற நான் எடுத்த முடிவு தான் என் வாழ்நாளிலேயே மிகக் கடினமான முடிவு. ஆனால், துப்பாக்கிகளின் முழக்கத்துக்கு முடிவு கட்ட, காபூலைக் காப்பாற்ற, 60 லட்சம் மக்களைக் காப்பாற்ற நான் வெளியேறுவது மட்டுமே ஒரே வழி என்று நம்பினேன். என் வாழ்வின் 20 ஆண்டுகளை ஆப்கன் மக்களுக்காக நான் செலவிட்டுள்ளேன். ஆப்கனில் ஜனநாயகம் தழைத்தோங்க நான் பாடுபட்டிருக்கிறேன். மக்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
நான் என்னுடன் மில்லியன் கணக்கில் டாலர்களை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. எனது முடிவும் எனக்கு முந்தையவர்களுக்கு நேர்ந்தது போல் துன்பியலாகவே முடிந்திருக்கிறது’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தன்னிடம் தலிபான்களுக்கு எதிராக சாகும்வரை போராடத் தயார் என்று கூறியதாகவும் ஆனால் அடுத்த நாளே அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிவிட்டார் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நாங்கள் ஆப்கன் அதிபர் கனியுடன் நட்புறவு பேணி வந்தோம். தலிபான்களை கட்டுப்படுத்த ராஜதந்திரத்தைப் பயன்படுத்தினோம். நாங்கள் கனியை ஊக்கப்படுத்தினோம்
ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி என்னிடம் தலிபான்களுக்கு எதிராக சாகும்வரை போராடத் தயார் என்று கூறினார். ஆனால் அடுத்த நாளே அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிவிட்டார்.
கனியுடன் பல மாதங்கள் தொடர்பில் இருந்தேன். அதிகார மாற்றத்திற்கான திட்டத்துடன் உடன்படுமாறு கனிக்கு அழுத்தம் கொடுத்தோம். அவர் அதைச் செய்யத் தயாராக இருப்பதாக என்னிடம் தொலைபேசியில் கூறினார். ஆனால் அதற்குள் தலிபான்கள் முந்திக் கொண்டார்கள். அவர் மரணம் வரை போராடத் தயாராக இருந்ததாக கூறினார். அடுத்த நாளே, அவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். இது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT