Published : 31 Oct 2021 12:38 PM
Last Updated : 31 Oct 2021 12:38 PM

உலகிற்கு 500 கோடி கரோனா தடுப்பூசி வழங்க இந்தியா தயார்: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி | படம் ஏஎன்ஐ

ரோம்

கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடுவதற்காக இந்த உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடந்து வருகிறது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது குறித்த வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்களா நிருபர்களிடம் கூறியதாவது:

உலகளாவிய பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்த தலைப்பில் பிரதமர் மோடி பேசினார். இதில் ஒவ்வொரு நாடுகளும் கரோனா தடுப்பூசிக்கு பரஸ்பர அடிப்படையில் சான்றுகள் அளிப்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உலகளாவிய நிதி கட்டமைப்பை வலுப்படுத்தவும், நியாமாகவும், நேர்மையாகவும் நடத்த கார்ப்பரேட் வரியை குறைந்தபட்சம் 15 சதவீதமாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்தார். வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக குறைந்தபட்ச வரிவிதிப்பை ஜி-20 நாடுகள் அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஜி-20 நாடுகள் தலைவர்கள் முன் கூறுகிறேன். உலகளவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரி்த்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது. கரோனா வைரஸை ஒழிக்கஇந்தியா உறுதியாக இருக்கிறது.

அதேசமயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு விரைந்து அங்கீகாரத்தை உலகசுகாதார அமைப்பு வழங்கினால்தான் இது சாத்தியமாகும் என்று பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.

எங்கள் நாட்டு மக்களுக்கு மட்டும் தடுப்பூசி தயாரித்து வழங்காமல் உலக நாடுகளுக்கும் தடுப்பூசியை தயாரித்து இந்தியாவால் வழங்க முடியும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு தேவையான தடுப்பூசியை வழங்குவோம். 150 நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியாவால் வழங்க முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்

இவ்வாறு ஷ்ரிங்கலா தெரிவித்தார்

இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 3-ம் தேதி நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x