Published : 28 Oct 2021 02:32 PM
Last Updated : 28 Oct 2021 02:32 PM
அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், "அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் . அமெரிக்காவுடனான மறைமுகமான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்று தெriவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே அப்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முயன்று வந்தார்.
இதற்கான வாய்ப்பு உருவாகி வந்த நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும் சூழலை ஈரானின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள இப்ராஹிம் ரைசியும் முன்னெடுத்து வருகிறார்.
அனைத்து விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
பின்னணி:
அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும், ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தார். இதற்கு பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறியது.
இந்நிலையில் டெஹ்ரானுக்குத் தெற்கே ஃபோர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் நவம்பர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT