Published : 22 Oct 2021 02:47 PM
Last Updated : 22 Oct 2021 02:47 PM
தைவானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது, “ நாங்கள் இதில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தைவானை தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.
தைவான் -சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தீவிரமாக இருக்கிறார். சீனா அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது என்று கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
”தைவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி. சமீபத்தில் தைவான் ஜலசந்திக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள” என்று சீனா தெரிவித்தது.
முன்னதாக , சீனா கனவு காண்கிறது. தலிபான்கள் வழியைப் பின்பற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்தார்.
தைவான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் உருவானது. என்றாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவைப்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு முன்பு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சீனா சமீபத்திய ஆண்டுகளில் தைவானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தைவான் இடையிலான எல்லையைக் கடந்துள்ளன என்றும், அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT