Published : 07 Mar 2016 01:41 PM
Last Updated : 07 Mar 2016 01:41 PM

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: இலங்கை அரசுக்கு ராஜபக்ச எச்சரிக்கை

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையே திட்டமிடப்பட்டுள்ள ‘பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ குறித்து எச்சரிக்கையுடன் செயல்படுமாறு இலங்கை அரசுக்கு முன்னாள் அதிபர் ராஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளார்.

அவர் தனது பதவிகாலத்தில் இந்தியாவுடன் தீவிர வர்த்தக உடன்பாட்டை ஆதரித்தவர்தான், ஆனால் இப்போது ஒவ்வொரு கட்டமாக வர்த்தக ஒப்பந்தத்தை எடுத்துச் செல்லுமாறு அவர் இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஏற்கெனவே உள்ள சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கு உள்ள தடைகள் முதலில் அகற்றப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல்பகுதிக்குள் வந்து அத்துமீறி மீன்பிடிக்கும் விவகாரம் தற்போது நெருக்கடி பரிமாணத்தை எட்டியுள்ளது. எனவே இருநாட்டு மக்களிடையே புரிதலுக்கான சூழலை உருவாக்க வேண்டுமெனில் இந்த விவகாரத்தை முதலில் தீர்க்க வேண்டும்.

எனவே சில ஆண்டுகளுக்கு சுதந்திர வாணிப ஒப்பந்தம் இலங்கைக்கு சாதகமாக, திருப்திகரமாக இருக்குமாறு கொண்டு செல்லப்பட வேண்டும் அடுத்த கட்டமாக ஒப்பந்தங்களின் குறிப்பிட்ட விவரங்களை சரி செய்து பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாட்டு உறவுகளை விரிவுபடுத்த வேண்டும்.

இந்தியாவுடனான வர்த்தகத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்கள் உள்ளன, சரக்கு சான்றிதழ், தரத்தின் பரஸ்பர அங்கீகாரம், இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள் மீதான இந்திய அரசின் விதிமுறைகள், உச்சவரம்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் இந்தியச் சந்தையில் இலங்கை தனது முழு ஏற்றுமதி சாத்தியங்களை எட்ட விடாமல் செய்து வருகின்றன” என்றார்.

இலங்கையின் ஜவுளி மற்றும் தேயிலை ஆகியவற்றுக்கு இந்தியா, ‘கட்டுப்பாடுகளற்ற’ வர்த்தகத்தை திறந்து விட வேண்டும். எனவே ஏற்கெனவே நிலுவையில் உள்ள இந்தியாவுடனான வர்த்தக இக்கட்டுகளை தீர்க்காமல் இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை வளர்த்துக் கொள்வது எதிர்ப்புகளையே கிளப்பும். எனவே இது குறித்து நாடாளுமன்றம், வர்த்தக கூட்டமைப்புகள், தொழில்பூர்வ அமைப்புகள் மற்றுக் பொதுமக்கள் ஆகியோரது நம்பகத்தன்மையை பெற்ற பிறகே இலங்கை அரசு முடிவெடுக்க வேண்டும்.

இதனை விடுத்து அராஜகப் போக்கில் இலங்கை அரசு செயல்பட்டால், இருநாடுகள் உறவில் பரஸ்பர வர்த்தகப் பயன் இல்லாமல் போய் விடும் என்று ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x