Published : 08 Oct 2021 07:53 AM
Last Updated : 08 Oct 2021 07:53 AM
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை இரு டோஸ் செலுத்திய இந்தியர்கள், இந்தியப் பயணிகள் அக்டோபர் 11-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு வந்தால், அவர்களுக்கு 10 நாட்கள் கட்டாயத் தனிமை தேவையில்லை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீரித்தபோதிலும், இரு டோஸ் செலுத்த இந்தியர்கள் 10 நாட்கள் பிரிட்டனில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பதிலடியாக இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகளும் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இறுதியாக இந்தியாவின் பதிலடி முயற்சிக்கு பிரிட்டன் பணிந்துவிட்டது.
இந்த அறிவிப்பை இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எலிஸ் தெரிவித்தார்.
பிரிட்டன் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்த அறிக்கையில், “பிரிட்டன் அரசு சர்வதேசப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த உள்ளது. அதன்படி இந்தியாவின் தடுப்பூசி முறைக்கு அக்டோபர் 11-ம் தேதி முதல் அங்கீகாரம் அளிக்கிறோம்.
திங்கள்கிழமை முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் கோவிஷீல்ட் இரு டோஸ் அல்லது வேறு எந்த கரோனா தடுப்பூசியும் இரு டோஸ் செலுத்தி இருந்தால், அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை.
பிரிட்டனுக்கு வர எளிமையான வழி, இந்தியர்களுக்குச் சிறந்த செய்தியாக அமையும். எங்கள் முயற்சிக்கு ஒத்துழைத்த இந்திய அரசுக்கு நன்றி. பல மாதங்களுக்கு முன்பே இந்தியர்களுக்கு நாங்கள் அனுமதி அளித்துவிட்டோம். கல்வி விசா, மாணவர்களுக்கான விசா, வர்த்தக விசா என ஆயிரக்கணக்கில் வழங்கிவிட்டோம்.
தடுப்பூசி தொடர்பாக கடந்த சில வாரங்களாக தேவையில்லாத சர்ச்சைகள் எழுந்தன. அவை முடிவுக்கு வந்துள்ளன. இனிமேல் இரு நாட்டுப் பயணிகளும் தடையின்றிச் செல்லலாம். இரு நாடுகளுக்கு இடையே அதிகமான விமான சேவையும் இயக்கப்படும்” எனத் தெரிவி்த்துள்ளார்.
இதற்கிடையே ரெட் லிஸ்ட்டில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையை 7 ஆக பிரிட்டன் குறைத்துவிட்டது. 37 நாடுகளின் தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி அக்டோபர் 11-ம் தேதிக்குப் பின் பிரிட்டன் செல்லும் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்தியர்கள், பிரிட்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை. விமான நிலையத்திலும் எந்தவிதமான பரிசோதனையும் எடுக்கத் தேவையில்லை. பிரிட்டனுக்கு வந்தபின் 8-வது நாளில் செய்யப்படும் கரோனா பரிசோதனையும் தேவையில்லை.
ஆனால், ரெட் லிஸ்ட்டில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், பிரிட்டன் வந்தபின் 10 நாட்கள் தனிமை, கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT