Published : 06 Oct 2021 01:58 PM
Last Updated : 06 Oct 2021 01:58 PM
2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது.
உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து அறிக்கை வெளியி்ட்டுள்ளது. அந்த அறிக்கையை உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டெரி தலாக் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
உலகளவில் பருவநிலை மாறுபாடு அதிகரிப்பதால், தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், ஏராளமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது போன்ற சிக்கல்கள் வரும் காலத்தில் ஏற்படும். 2018-ம் ஆண்டில் ஆண்டுக்கு 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்தார்கள். இது 2050-ம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை, சிக்கலை எதிர்கொள்வார்கள்.
ஆதலால், கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளைக் கடைபிடித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றக் கொள்கைகளைக் கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும், இந்த விலைமதிப்பற்ற பொருளில் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.
வெப்பநிலை அதிகரிப்பால் உலகளவில், மண்டல அளவில் மழைப்பொழிவில் மாற்றத்தை ஏற்படுத்தும், பருவம் தவறிய மழை மற்றும் வேளாண் பயிரிடுதலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் உணவுப்பாதுகாப்பிலும், மனிதர்களின் உடல்நலம், நலன் சார்ந்ததில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு செ.மீ வீதம், மண்ணில் ஈரப்பதம் குறைதல், பனி உறைதல், நிலப்பரப்பில் நீர் குறைதல், நீர் தேங்கிவைத்தல் குறைவு போன்றவை ஏற்படுகின்றன.
இந்த பாதிப்பு அன்டார்டிகா மற்றும் கிரீன்லாந்தில் பெரிய அளவில் இருக்கிறது, இழப்பும் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதிக மக்கள் தொகை கொண்ட தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்கள் பகுதிகளில் மிகப்பெரிய தண்ணீர் இழப்பை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் பாரம்பரியமாக நல்ல தண்ணீர் கிைடத்த நிலையில் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது.
உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் இருக்கிறது. உண்மையக் கூறுவதென்றால், பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமலும், சுத்தமான நீராகவும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதானால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2000ம் ஆண்டிலிருந்து, பெருவெள்ளம் தொடர்பான பேரழிவுகள் 134 சதவீதம் அதிகரித்துள்ளன. பெரும்பாலான பொருளாதார ரீதியான மற்றும் மனித உயிரிழப்புகள் ஆசியாவில்தான் நடந்துள்ளன.
அதேசமயம், வறட்சி, பஞ்சம் போன்றவை இதே காலகட்டத்தில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்காவில் வறட்சி,பஞ்சம் தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த இரு கண்டங்களுக்கும் வலிமையான எச்சரிக்கை முறைகளை நிறுவுவது அவசியம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT