Published : 06 Oct 2021 10:51 AM
Last Updated : 06 Oct 2021 10:51 AM
ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிர ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜனநாயக ஆட்சி வீழ்ந்தது. அமெரிக்கப் படைகளுடனும், ஆப்கானிஸ்தான் அரசுடனும் 20 ஆண்டுகாலமாக சண்டையிட்டு வந்த தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து அங்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் ஆப்கனுடனான உறவைத் துண்டித்தன. இதனால், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆப்கனில் சுமார் 14 மில்லியன் மக்கள் தண்ணீர், உணவு, அடிப்படை மருத்துவ சேவை, போதிய ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் யுனிசெப் அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான பிரதிநிதி ஹெர்வெ லுடோவிக் டே லிஸ் இரண்டு நாள் பயணமாக ஹெராட் நகருக்குச் சென்றார். அவருடன் உலக உணவுத் திட்டத்தின் ஆப்கனுக்கான பிரந்திநிதி மேரி எல்லென் மெக்கோர்ட்டியும் சென்றார்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் 95% வீடுகளில் போதிய உணவு இல்லை. குழந்தைகளுக்காக பெற்றோர், பெரியவர்கள் சில வேளை உணவுகளை தியாகம் செய்கின்றனர்.
இது குறித்து மேரி எல்லென் மெக்கோர்ட்டி கூறும்போது, "குழந்தைகளுக்காக பெற்றோரும், பெரியவர்களும் பட்டினி கிடக்கும் சூழலைப் பார்க்கும்போடு கவலையாக இருக்கிறது. இதில் உடனடியாக தலையிடாவிட்டால் ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான பிரச்சினையாக உருவெடுக்கும். சர்வதேச சமூகம் உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு தாராளமாக நிதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை சரி செய்யமுடியாத அளவுக்குச் சென்றுவிடும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT