Published : 05 Oct 2021 08:47 AM
Last Updated : 05 Oct 2021 08:47 AM
உலகம் முழுவதும் முதன் முறையாக தொடர்ச்சியாக பல மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கிய நிலையில் அதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் அந்நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெஸன்ஹ்சர் சேவைகள் இப்போது திரும்பக் கிடைக்கின்றன. தடங்கலுக்கு வருந்துகிறேன். நீங்கள் அனைவரும் நீங்கள் நேசிக்கும், உங்கள் அக்கறைக்கு பாத்திரமானவர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல், வாட்ஸ் அப் தனது சேவை முடக்கம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தது. "வாட்ஸ் அப் சேவையைப் பயன்படுத்துவதில் சிக்கலை சந்தித்த அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் மெல்ல மெல்ல கவனமாக வாட்ஸ் அப்பை மீண்டும் செயல்படச் செய்து வருகிறோம். தங்கள் அனைவரின் பொறுமைக்கும் நன்றி. நாங்கள் அவ்வப்போது உங்களுக்கு அப்டேட்களைத் தெரிவிப்போம்" என்று கூறியிருந்தது.
அடுத்த ட்வீட்டில் அதன் சிஇஓ, வாட்ஸ் அப் முழுமையாக இயங்கத் தொடங்கிவிட்டது எனப் பதிவிட்டிருந்தது.
உலகம் முழுவதும் உள்ள இணைய சேவைகளின் தடங்கல்கள், முடக்கம் ஆகியனவற்றை கணிக்கும் டவுன்டிடக்டர் என்ற நிறுவனம் சமீப காலத்தில் ஏற்பட்ட மிக நீண்ட முடக்கம் இதுவென்று தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. எனினும், இது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கி மீண்டது. ஆனால், நேற்று தொடர்ச்சியாக பல மணி நேரம் ஒரே நேரத்தில், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT