Last Updated : 04 Oct, 2021 08:20 PM

 

Published : 04 Oct 2021 08:20 PM
Last Updated : 04 Oct 2021 08:20 PM

ஜப்பானின் புதிய பிரதமருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

ஜப்பானின் புதிய பிரதமர் ஃபுஹிமோ கிஷிடாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் நாடாளுமன்றமான டயட் அந்நாட்டின் புதிய பிரதமராக ஃபுஹிமோ கிஷிடாவை தேர்வு செய்துள்ளது. பிரதமர் கிஷிடாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க ஜப்பான் இடையேயான நல்லுறவு, இந்தோ பசிபிக் பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியமானது.

முன்னாள் பிரதமர் சுகா, தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா ஜப்பான் உறவை முன்னோக்கி எடுத்துச் சென்றார். அதற்காக அவருக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுகா மாற்றமும்; கிஷிடா நியமனமும்: பின்னணி

ஜப்பானின் பிரதமராக இருந்த யோஷிடே சுகா மீது பரவலாக அதிருப்தி உருவானது. கரோனா பெருந்தொற்றைக் கையாணட் விதத்தால் அவர் மீது அதிருப்தி எழுந்தது.

இந்நிலையில், அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
இதனையடுத்து, ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை நடத்தியது. இத்தேர்தலில் தாரோ கோனோ, ஃபுமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான ஃபுமியோ கிஷிடாவுக்கும் தாரோ கோனாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தாரோ கோனா தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்தியதில் பிரபலமடைந்திருந்தார். தன்பாலின உறவை ஆதரிப்பதாகப் பேசி ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றவர்.

ஆனால், ஃபுமியோ கிஷிடோ ஜப்பானின் அடுத்த பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிஷிடா 2012 முதல் 17 வரை ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் ரஷ்யா, தென் கொரியா நாடுகளுடன் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பாலமாக இருந்திருக்கிறார்.
அணு ஆயுத ஒழிப்பே தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறுபவர். ஆனால், தன்பாலின உறவை ஆதரிப்பது, தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது போன்றவற்றில் கிஷிடா வெளிப்படையாக இதுவரை எதுவும் தெரிவித்ததில்லை.

1993 ஆம் ஆண்டு தான் கிஷிடா அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்னர் அவர் வங்கியில் பணிபுரிந்து வந்தார். பேஸ்பால் என்றால் அவருக்கு அலாதி பிரியம். முன்னாள் பிரதமர் சுகா டீ டோட்டலர் என்றால், கிஷிடா அவ்வப்போது அளவாக மதுவையும் ருசிக்கக் கூடியவர் என்ற ருசிகரமான தகவலும் வெளியாகியுள்ளது. கிஷிடாவின் மனைவியின் பெற்றோர் மதுபான தயாரிப்புத் தொழிலில் உள்ளனர்.

கிஷிடா தனது சிறுவயதில் பெற்றோருடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துள்ளார். அங்கு இனவெறி பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த அனுபவங்கள் தனக்கு நீதியின் வலிமையை உணரச் செய்ததாகவும் அவர் சில பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x