Published : 04 Oct 2021 07:26 PM
Last Updated : 04 Oct 2021 07:26 PM
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மதரஸாக்கள் சில தீவிரவாதிகளை உருவாக்கும் மையங்களாகவே இன்னமும் செயல்படுகின்றன என தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய மையத்தின் ஆய்வாளர் ஆன் ஹெக்கெண்டார்ஃப்தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் 48வது மனித உரிமைகள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசிய ஆன் ஹெக்கெண்டார்ஃப், "தெற்காசியாவில் மதபோதகப் பள்ளிகளில் இருந்து பயங்கரவாதமும் ஊக்குவிக்கப்படுவது நீண்ட காலமாகவே ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் உள்ள இப்படியான சில மதபோதகக் கூடங்களில் இஸ்லாத்தை பழமைவாத எண்ணங்களுடன் அணுகும் முறை இளம் நெஞ்சங்களில் விதைக்கப்படுகிறது.
தலிபான்களும், ஹக்கானிகளும் இத்தகைய இடங்களில் இருந்து உருவானவர்கள் தான். லஷ்கர் இ தொய்பாவும், ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளும் பாகிஸ்தானில் இன்னும் பாதுகாப்பாக இயங்க அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முக்கியக் காரணமாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் எண்ணற்ற சட்டவிரோத மதரஸாக்கள் இருக்கின்றன. ஜிஹாத் அல்லது புனிதப்போரில் பங்கேற்குமாறு இந்த போலியான கூடங்கள் இளைஞர்களை ஊக்குவிக்கின்றன. மற்ற மதத்தினர் மீதான வெறுப்புப் பிரச்சாரமும், துப்பாக்கிக் கலாச்சாரமும் அங்கு தூண்டிவிடப்படுகின்றன.
கல்வி தொடர்பாக தலிபான்கள் அளிக்கும் போலியான வாக்குறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் ஏமாந்துவிடக் கூடாது. ஆப்கானிஸ்தானில் இன்னொரு தலைமுறை போலி மதரஸாக்களின் பிடியில் சிக்கி அடிப்படைவாதத்துக்கு ஆளாகாமல் காக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை.
ராஜாங்க ரீதியான உறவுக்கும், பொருளாதார பிணைப்புகள், மனித உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் தலிபான்கள் நிபந்தனைகள் விதிக்காமல் இருந்தால் தான் ஆப்கானிஸ்தான் வளர்ச்சி காண முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT