Published : 04 Oct 2021 12:04 PM
Last Updated : 04 Oct 2021 12:04 PM

ஷாஹீன் புயலால் கொட்டித்தீர்த்த பெருமழை: வெள்ளக்காடானது மஸ்கட்

மஸ்கட்

ஓமன் கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஷாஹீன் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இதனால் தலைநகர் மஸ்கட்டில் குறைந்த நேரத்தில் மிக கனமழை பெய்ததால் கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதுடன் விமான நிலையத்தையும் தண்ணீர் சூழ்ந்தது.

ஓமன் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஷாகீன் புயல் நேற்று அல் பத்தினா பகுதியில் கரையைக் கடந்தது. அப்போது கடல் பகுதியில் வழக்கத்தைவிட அலைகள் 5 அடிக்கும் மேல் ஆர்ப்பரித்தன. புயலால் பலத்த காற்று வீசி மேகக் கூட்டங்களை கொண்டு சேர்த்தது.

குறைந்த நேரத்தில் மிக கனமழை பெய்ததால் மஸ்கட் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம்போல் தேங்கின. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடானது.

கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. பலத்த காற்றும் வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சுல்தான் கபூஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக கப்பல் மூழ்கியது. அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக மஸ்கட் நகரின் பல பகுதிகளில் மின்சாரத்தை துண்டிக்க தேசிய விபத்துகால அவசரக் குழு நடவடிக்கை எடுத்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழந்ததால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் 2,700 க்கும் மேற்பட்டோர் மக்கள் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மஸ்கட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

புயல் கரையை கடந்து வெள்ளம் வடியும் வரை மஸ்கட்டில் உள்ள சாலை வழிப்போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவசர பணிகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x