Published : 01 Oct 2021 12:13 PM
Last Updated : 01 Oct 2021 12:13 PM
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்காவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய இந்தியப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குள் தடையின்றி வரலாம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜென்காவின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கவில்லை. கோவிஷீல்ட் தடுப்பூசியை இரு டோஸ்கள் செலுத்தியவர்கள் பிரிட்டன் வந்தாலும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனக் கூறியது பெரும் சர்ச்சையான நிலையில் ஆஸ்திரேலிய அரசு அனுமதித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் சீனாவில் தாயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இரு தடுப்பூசிகளையும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்குள் வரும் வெளிநாட்டுப் பயணிகள் சினோவேக், கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் செலுத்தியிருந்தால், அவர்கள் ஹோட்டலில் தனிமையில் இருக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு இதுவரை பைஸர், அஸ்ட்ராஜென்கா, மாடர்னா, கோவிஷீல்ட், சினோவேக் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக்ஸ் ஆகிய இரு தடுப்பூசிகளும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. சர்வதேசப் பயணிகள் இரு தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை இரு டோஸ்கள் செலுத்தியிருந்தால், அவர்களுக்குத் தனிமைப்படுத்துதல் அவசியமில்லை.
இதன் மூலம் சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தடையின்றி வரலாம். அடுத்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் மாநிலங்களுக்குத் திறக்கப்படும். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் 80 சதவீதமாக அதிகரித்துள்ளனர்
முழுமையாகத் தடுப்பூசி செலுத்திய ஆஸ்திரேலிய மக்கள், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் இனிமேல் ஹோட்டலில் தனிமைப்படுத்தாமல் வீடுகளில் மட்டும் ஒரு வாரம் தனிமைப்படுத்தினால் போதும். தடுப்பூசி செலுத்திய ஆஸ்திரேலிய மக்களுக்காக வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்தும் விரைவில் தொடங்கும்.
விமானத்தில் பயணிக்கும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தி, தனிமைப்படுத்துதலை முடித்தபின் பயணிக்கலாம். இல்லாவிட்டால் 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாத பயணிகள் 14 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து மாநில அரசுகளுடன் பேசி வருகிறோம். கரோனா பரிசோதனை விமான நிலையங்களில் தொடர்ந்து நடத்தப்படும். ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமல்லாமல் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் நடத்தப்படும்''.
இவ்வாறு மோரிஸன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT