Published : 30 Sep 2021 09:04 PM
Last Updated : 30 Sep 2021 09:04 PM
இது உங்கள் நாடு. இதைவிட்டு வெளியே செல்லாதீர்கள் என சொந்த நாட்டிலிருந்து செல்ல முற்படும் மக்களை பாகிஸ்தான் எல்லையில் தடுத்து நிறுத்தி கெஞ்சி வருகின்றனர் தலிபான்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் செல்லும் எல்லைப் பகுதிகளில் பிரதானமானது ஸ்பின் போல்டக் பகுதி. இங்கிருந்து சில 100 மீட்டர் நடந்து சென்றால் போதும் பாகிஸ்தான் வந்துவிடும்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்ததில் இருந்து அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். விமானம் மூலமாக மட்டும் 1.24 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்பின் போல்டக் பகுதியில் தற்போது தலிபான்கள் முகாமிட்டுள்ளனர். அங்கிருந்து வெளியே செல்ல முற்படும் மக்களிடம், இது உங்கள் தேசம் இங்கிருந்து வெளியே செல்லாதீர்கள். அவ்வாறு செல்வது ஆப்கன் கலாச்சாரத்தை அவமதிப்பதாகும் என்று கெஞ்சி வருகின்றனர்.
ஆனாலும் அங்கு அன்றாடம் 8000 முதல் 9000 பேர் வரை வந்து செல்கின்றனர்.
அவ்வாறாக ஆப்கனைவிட்டு வெளியேறும் எண்ணத்துடன் வந்த 24 வயதான ஜாகிருல்லா கூறுகையில், காபூலில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது எனது ஊர். பாகிஸ்தானுக்குச் சென்றால் ஏதாவது வேலை கிடைக்குமென்பதால் செல்கிறேன் எனக் கூறினார்.
நங்கர்ஹர் பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிஃப், எனக்கு 8 குழந்தைகள். ஆப்கனில் வேலை இல்லை. என் கையில் பணமும் இல்லை. அதனால் பாகிஸ்தான் சென்று பஞ்சம்பிழைக்கப் போகிறேன் என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கனில் இருந்து 5 லட்சம் பேராவது அண்டை நாடுகளுக்குச் செல்வார்கள் என்று ஐநாவின் அகதிகள் ஆணையம் கணித்துள்ளது.
பாகிஸ்தானும் தனது எல்லைகளை மூடிவிட்டது. ஆகஸ்ட் இறுதிவரை தாரளமாக மக்களை அனுமதித்தது. ஆனால் இப்போதெல்லாம் போதிய ஆவணங்கள் வைத்திருப்போரை மட்டுமே அனுமதிக்கிறது.
ஆப்கனில் வேலையில்லா திண்டாட்டமும், பணப்புழக்கம் இல்லாததும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் ஆப்கனில் 91% மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே வந்துவிடுவார்கள் என ஐ.நா கணித்துள்ளது. உலக நாடுகள் தாராளமாக ஆப்கன் மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT